Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Thursday, July 27, 2017

மீசை..


மீசை அவரது அடையாளம் மட்டுமல்ல அவரது பெயரும் கூட.
அவரை எப்பொழுது முதலில் சந்தித்தேன் என்று ஞாபகம் இல்லை.  நினைவாற்றல் வரும் முன்பே அறிமுகம் என்று நினைக்கிறேன்.  மீசைக்கு எவ்வளவு வயது என்று என்னால் இன்றும் யூகிக்க முடியவில்லை. சுமார் எழுபது வயதுடைய தோற்றம்.  அவருக்கு  பூ விழுந்த கண்கள், வெற்றிலைச் சிவப்பான வாய்.  எஞ்சிய பற்கள் அனைத்தும் கரை படிந்து மஞ்சள் சிவப்பு வர்ணம் பூசியவை.  வெற்றிலை பாக்குப் பை இடுப்பில் எப்பொழுதும் உண்டு.  அதை நிரப்பி வைத்திருக்கவே அவர் பாடுபடுவதாக தோன்றும்.



அவர் எங்கள் நகரில் உள்ள பல வீடுகளில் குப்பை அள்ளுவதும், பாத்தி கட்டுவதும் , செடிகளை நடுவதும் போன்ற துப்புறவு வேலைகளை செய்து வந்தார்.  அவரது மனைவி மங்கி சாணி மொழுகுவது, வீடு பெருக்குவது, வாசல் தெளிப்பது போன்ற பணிகளை செய்து வந்தார்.  என் பாட்டி அவர்கள் இருவரையும் எங்கள் வீட்டின் அங்கமாக நடத்தினார்.

அவர்களது உடைமைகள் எங்கள் வீட்டின் மாடிப்படிகளின் அடியில் இருக்கும்.
ஒரு பழைய தழும்புகள் விழுந்த ரப்பர் செருப்பு, பழுப்பு நிறத்தில் ஒரு பை, சோறும் கஞ்சியும் ஏந்த தோதான ஒரு பாத்திரம் மற்றும் தண்ணீர் குடிக்க ஒரு ஒடுங்கிய பிளாஸ்டிக் குடுவை.   இவ்வளவு தான் அவர்களின் தேவை.  காலையிலேயே இருவரும் வந்து விடுவார்கள்.  எங்கள் நகரை அடைய தினமும் நான்கு கிலோமீட்டர்கள் நடந்து வருவார்கள்.

மீசையின் சொத்து ஒரு கடப்பாரையும் ஒரு மண்வெட்டியும் தான்.  எங்கள் வீட்டின் தென்னை மரங்களை சீவி சிங்காரித்து அழகு படுத்துவார்.  சப்போட்டா மரத்திற்கு இயற்கை உரம் கொண்டு வந்து போடுவார்.  சப்போட்டா பழங்களை திங்க எங்களுக்கும் வவ்வால்களுக்கும் போட்டியே நடக்கும்.  அவ்வளவு இனிமை.  நாள் முழுக்க அசரா நோவும் உழைப்பு.

வீட்டில் நிறைய பூனைகளையும் நாய்களையும் வளர்த்து வந்தோம்.  துரதிர்ஷ்டவசமாக அவற்றில் சில இறக்கும் பொழுது மீசையை தான் அழைப்போம்.  அவர் வந்து அவற்றை ஒரு சாக்குபையில் போட்டு காட்டுக்குள் சென்று அடக்கம் செய்வார்.  வேலையை முடித்த பின்னர் காசுக்காக வீட்டின் வாசலிலேயே மெளனமாக நின்று கிடப்பார்.  நான் சில சமையங்களில் கவனித்து அப்பாவிடம் கூறுவேன்.  காசை குனிந்து இரு கரங்களில் பெற்றுக்கொள்வார்.

 அவரது செருப்புகள் என்றுமே அவருடைய கால்களை விடப் பெரியதாக தான் இருக்கும்.  மங்கி அவரது இரண்டாம் மனைவி.  அவர்களுக்குள் என்றுமே ஒரு எரிச்சல் கலந்த அன்பு மொய்த்துக்கொண்டே இருக்கும்.  "யோவ் மீசை.  யோவ் மீச.  காதும் கேக்காது.   இந்தா  சோறு.  சோறு சோறு  தின்னு." என்று மங்கி கத்தி அழைக்க மீசை குந்தி சோற்றை மீசையில் ஓட்ட தின்பார்.

மதியம் சில வேளைகளில் களைப்பாற வீட்டின் முன்னறையில் அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பார்கள்.  நான் சில சமயங்களில் இவர்கள் என்னடா எங்கள் தொலைக்காட்சியை பார்ப்பது என்று மறைத்தோ அணைத்தோ விட்டிருக்கிறேன்.  அதை நினைத்தால் வெட்கிப்போகிறேன்.  வீட்டை விட்டு வேலைக்காக வெளியூர்சென்றுவிட்டேன்.  அவ்வப்பொழுது வீடு வரும் பொழுது மீசையை காண்பதுண்டு.  கூன் விழுந்து உயரம் குறைந்து கொண்டே வந்தது.  ஆனாலும் அதே வேலைப்பழு அதே கூலி.  ஒரு முறை கூட குறை கூறியது நினைவில்லை.  என்னைக் காணும் பொழுது "சாமி நல்ல இருக்கீங்களா?" என்று நான் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்பார்.

கடைசியாக அவரை என்று பார்த்தேன் என்று நினைவில்லை.  "போய்ட்டு வாரொமுங்க" என்று கூறி விடை பெற்று செல்வார்.  இப்பொழுது அவர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை.  அவருக்குரிய மதிப்பையும் மரியாதையும்  நானோ சமுதாயமோ  அளிக்கவில்லை.  பெரிய மீசைக்காரர்களை பார்க்கும் பொழுதெல்லாம் அவர் ஞாபகம்.

நவம்பர் மாதத்தில் மோவெம்பருக்காக (Movember) ஒவ்வொரு ஆண்டும் மீசை வளர்க்கிறேன், ஆண்கள் ஆரோக்கிய  விழிப்புணர்வுக்காக அல்ல, மீசைக்காக. 

Friday, October 16, 2015

அமெரிக்காவில் ஒரு நாள்

சாதத்துடன்  சேர்த்து பொறுமையையும் கட்டிக்கொண்டு அலுவலகம் செல்ல தயாரானான்.  ஐ போட் வாயில் கேட்பொறியை சொருகி காதில் மாட்டிக்கொண்டான்.  சத்தத்தை கூடுமானவரை கூட்டினான் .  உலகம் நிசப்தம் ஆனது.  ஜெர்சி சிட்டி நியூபோர்ட் பாத் (PATH) ரயில் நிலையத்தை அடைந்தான்.  நியூயார்க் செல்லும் ரயில் வந்ததும் நெரிசலில் உள்ளே  சென்று சொருகிக்கொண்டான்.  என். பி. ஆர். உடைய ஆஸ்க் மீ அனதர் பொட்காஸ்ட் ஒலித்துக்கொண்டிருந்தது.  ரயில் மீன் போல ஹட்சன் நதிக்கடியில் நீந்தி நியூ யார்க்கை அடைந்து கொண்டிருந்தது.

ஒவ்வொரு நிறுத்தத்திலும் ரயிலின் பாரம் குறைந்து கொண்டு இருந்தது.  மன்ஹட்டனின் 33ஆம் தெரு நிறுத்தம் வந்தவுடன் பாதளத்தில் இருந்து வெளி உலகிற்கு வரிசையில் நின்று படிகளை கடந்து வந்தான்.  வெளி எங்கிலும் மக்கள் வெள்ளம்.  ஹெரல்ட் சதுக்கம் முழுவதும் சுற்றுலா பயணிகள்.  எம்பயர் ஸ்டேட் கட்டிடம் செல்லும் கூட்டம், மேசிஸ் மற்றும் இன்ன பிற கடைகளில் தள்ளுபடியில் வாங்கிக்கொண்டே இருக்கும் பெரும் கூட்டம்.  காலணி, காதணி, கழுத்தணி என அனைத்து அணிகளையும் ஒரு பிளாஸ்டிக் பையில் அடைத்து எறும்புகள் போல தூக்கிக்கொண்டு நடந்து கொண்டே இருந்தார்கள்.  நாளை உலகம் அழியும் என்றாலும் இன்று தள்ளுபடியில் பொருட்கள் வாங்கிக்கொண்டுதான் இருப்பார்கள்.  34ஆவது வீதியில் திரும்பி பார்க் அவென்யு நோக்கி பாம்பு போல நெளிந்து நடந்து ஓடினான். தினமும் காலையில் அவன் அலுவலகத்தில் ஒரு ஆலோசனை கூட்டம்  நடக்கும்.  புயலடித்தாலும் அந்த கூட்டத்திற்கு வந்துவிட வேண்டும்.  இல்லையென்றால் அவனது நிர்வாகி வேலையை விட்டு நிறுத்தவும் தயங்க மாட்டான்.


எம்பயர் ஸ்டேட் கட்டிடத்திற்கு அருகில் சுற்றுலா பயணிகளை வளைத்து போடும் நபர்கள் நின்று "எம்பயர் ஸ்டேட்  மேலே செல்ல வேண்டுமா?" என்று கூவிக்கொண்டிருந்தார்கள்.  அவர்களை கண்டுகொள்ளாமல் தாண்டி பார்க் அவென்யு வந்தடைந்தான்.  அலுவலக கட்டிடத்திற்கு உள்ளே செல்ல அனுமதி பெற மின் அட்டையை ஒரு சிறிய கருவி முன் நீட்டினான்.  அது அதன் மொழியில் பீப் என்று உள்ளே போக அனுமதி அளித்தது.  மின் தூக்கியின் உள்ளே சென்று 27 அருகில் உள்ள பொத்தானை அழுத்தினான்.  மின்தூக்கியில் பொருத்தி இருந்த கண்ணாடியில்  தலைமயிரை சரி பார்த்தான்.  27ஆவது மாடியில் இறங்கி நேராக ஆலோசனை கூட்டத்திற்குள் நுழைந்தான்.  வழக்கம் போல் கடைசி இருக்கையில் அமர்ந்து மறைந்தான்.  கைப்பேசியை தேய்த்து தேய்த்து அன்றைய செய்திகளை ப்ரீஃபிரன்டல் கார்டெக்ஸில் ஏற்றிக்கொண்டிருந்தான்.

அப்பொழுது கீழே சாலையில் இருந்து தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வண்டிகளின் ஒலி காதை கிழித்தது.  வழக்கத்துக்கும் அதிகமாகவே ஒலிக்க அவன் மற்றும் இன்னும் சில பேர் கீழே நோக்கினார்கள்.  சாலை முற்றிலுமாக வெறிச்சோடிக் கிடந்தது.  சில காவல் துறையினர் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தார்கள்.  அவன் உடனே ட்விட்டரை தட்டி விட்டு "34ஆம் சாலை நியூயார்க்" என்று தேடினான்.  எம்பயர் ஸ்டேட் கட்டிடம் அருகே துப்பாக்கிச்சூடு என்று பத்து பதினைந்து ட்வீட் தென்பட்டது.  "மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு" என்று ஒருவர் விவரிக்க அனைவருமே ஒரு நிமிடம் வருத்தப்பட்டு தலை அசைத்து, கைகளை மேலே உயர்த்தி கீழே போட்டார்கள்.  நிர்வாகி "என்ன செய்வது?" என்று கூறிவிட்டு அன்றைய அலுவலக பிரச்சனைகளை பற்றி ஆலோசிக்கத் தொடங்கினான்.

சிறிது நேரத்தில் கூட்டம் முடிந்ததும் அருகில் உள்ள டன்கின் டோனட்ஸ் (Dunkin Donuts) செல்ல கீழிறங்கி வந்தான்.  வெளியே அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பி இருந்தது.  எம்பயர் ஸ்டேட் கட்டிடம் அருகே எச்சரிக்கை என்று முத்திரை இடப்பட்ட மஞ்சள் பட்டைகளை கட்டியிருந்தார்கள்.  செய்திகளில் பொது மக்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டதாகவும், துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாகவும் கூறினார்கள்.  சம்பவம் காலை 9:03 க்கு நடந்தது.  அவன் 9 மணி அளவில் தான் அந்த இடத்தை கடந்துசென்றிருந்தான்.  அதை நினைத்து சற்று பீதி அடைந்தான்.  மூன்று நிமிடம் தாமதித்திருந்தால்.. மீண்டும் அலுவலகம் சென்றான்.  அனைத்தும் வழக்கம் போல ஓடிக்கொண்டிருந்தது.  அன்றைய வேலையில் மூழ்கி முத்தெடுத்து சோர்வடைந்து ஆறு மணிக்கு விடை பெற்று வீடு திரும்ப எத்தனித்தான்.  தன் மனைவிக்கு பிறந்த நாள் பரிசு வாங்க வேண்டும் என்று மூளை நினைவுறுத்தியது.  ரயில் நிலையம் செல்லும் முன்பு மேசிஸ் சென்றான்.  தள்ளுபடியில் இரண்டு காதணிகளை வாங்கிக்கொண்டு எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தை பார்த்துக்கொண்டே நடந்தான்.

"This America, man"


Tuesday, September 22, 2015

பச்ச கிளி

என்னடா நான் வளத்த கிளிய பத்தி பேச போறன்னு நெனக்கறீங்கள? நெனசுக்கொங்க நெனசுக்கொங்க. நான் கிளியே வளக்கலியே..
நான் சொல்ல வர்றது எங்க மாமாவோட பஜாஜ் சேடக் ஸ்கூட்டரப் பத்தி. எனக்கு ஒரு பதினேழு வயசு இருக்கும். அப்போ தாத்தாவோட டிவிஎஸ் பிப்டி மட்டும் தான் ஓட்டிக்கிட்டு இருந்தேன். அதுவும் நேரா மட்டும் தான் போக தெரியும். இடப்பக்கம் வலப்பக்கம் கூட திருப்ப தெரியாது. வண்டிய திருப்பனும்னா நிறுத்தி எறங்கி திருப்பி மறுபடியும் ஒதைச்சு கெளப்பிக்கிட்டு போவேன். வண்டிய ஒதைக்கும் போது சில சமயம் சைலன்சர்ல சூடு கூட பட்டிருக்கு. அது அப்டியே தடிப்பா புஸ்ஸுன்னு ஆய்டும். ஆன நேரா வேகமா போகும் போது ஏதோ ஒரு போதையா இருக்கும். அதுவும் தாத்தாவுக்கு தெரியாம எடுத்து ஓட்டினா இன்னும் அப்டியே தலைக்கு ஏறிடும். 


எனக்கு பதினெட்டு வயசு நெருங்கும் போது அப்பா மாமா கிட்ட கியர் வண்டி கத்துக்க சொன்னாரு. நானும் ஆழந் தெரியாத கிறுக்குத் தனத்துல மாமா வீட்டுக்கு போனன்.  அப்போ தான் ரொம்ப நாள் கழிச்சு  திரும்ப பச்ச கிளிய பாத்தேன்.  அது எவளோ பெரிய கில்லாடி தெரியுமா.. ஒரு தடவ அது காணாம பறந்து போய்டுச்சு.. எங்க மாமா அதுனால சந்தோச பட்டாரா  இல்ல வருத்த  பட்டாரானு இன்ன வரைக்கும் தெரில.. ஆனா எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.. அந்த கலர்ல திரும்ப இன்னொரு வண்டிய நான் எப்போ பாப்பேன் .. நீங்களே சொல்லுங்க.. ஆனா ரெண்டு நாள்ல யாரோ வீட்டுக்கே வந்து உங்க வண்டி ஒரு பொதருக்குள்ள கெடக்குதுனு சொன்னங்க.. மாமாவும் வேற வழி இல்லாம திரும்ப எடுத்துட்டு வந்துட்டாரு.. அப்பறம் கொஞ்ச வருசத்துல வேற ஒரு பெரிய வெஸ்பா ஸ்கூட்டர் வாங்கிட்டாரு மாமா.. அது நாள்ல இருந்து கிளிய கூண்டுல அடைச்சுட்டாரு..அப்பறோம் தான் எனக்கு சொல்லிக்குடுக்க ஒரு நாள் கிளிய வெளிய எடுத்தாரு.. பச்ச கிளிக்கு வயசே ஆகல ஆகாது..

மாமா அதுல எப்டி கியர் போடறதுன்னு சொல்லி கொடுத்தாரு..  அப்பறம் தெனமும் ஒரு மணி நேரம் அதுல சவாரி செஞ்சு ஒரு அளவு பழகிட்டேன்..  மாமாவும் அத  கொஞ்ச நாள் என்னையே வெச்சுக்க சொன்னாரு..  அன்னில இருந்து எனக்கு தூங்கற நேரம் தவற மத்த எல்லா நேரமும் அதோட தான்..  கொஞ்சம் கொஞ்சமா வண்டிய மெயின் ரோட்ல ஓட்ட ஆரம்பிச்சேன்.. அடிக்கடி கொஞ்ச தூரம் போக போக கிளி சோர்ந்து போய் தூங்கிடும்.. அப்பறம் அது கிட்ட கெஞ்சி  படுக்க வெச்சு மிதிச்சா எழுந்திரிச்சுக்கும்..  கொஞ்ச நம்பிக்கை வந்தவுடனே மத்தவங்களுக்கு லிப்ட் கூட குடுக்க ஆரம்பிச்சேன்னா பாத்துக்கோங்க.. மொத மொதலா ஒருத்தன ஏத்திகிட்டு  எறக்கி  விட்ற வரைக்கும் தைரியமா நடிச்சது மறக்க முடியுமா சொல்லுங்க..

அப்போ நான் மொத தடவ கிட்டார் கத்துக்க முயற்சி பண்ண காலம்.. பின்னாடி கிட்டார மாட்டிக்கிட்டு பச்ச கிளில ஒரு ரௌண்டு வந்தேன்ன எல்லா பொண்ணுங்களும் நம்மளையே பாப்பாங்கன்னு நெனச்சுட்டு இருந்தேன்.. அப்பறமா சில வருஷம் கழிச்சு அம்மா நான்  வலம் வரும் காட்சிய வர்ணிச்சு சிரிச்சாங்க.. ஊரே கை கொட்டி சிரிச்சிருக்கும்.. இதுல என்னன்னா பச்ச கிளிக்கு இன்சூரன்ஸ் இல்ல, வரி கட்டல.. ஆனா அத பத்தியெல்லாம் எனக்கு கவலையே இல்லாம கிளிய பறக்க விட்டேன்..

ஒரு தடவ தங்கச்சிய பரிச்சைக்கு கொண்டு போய் விட போய்ட்டு இருந்தங்க.. திடிர்னு நம்ம தண்ணீர் பந்தல் வளைவுக்கு முன்னாடி தாகம் எடுததான்னு தெரில கிளி நின்னுடுச்சு.. பரிச்சைக்கு நேரம் வேற ஆகிட்டே இருக்கு.. என்ன என்னமோ பண்ணி பாத்தேங்க.. ஊஹும்.. அப்பறம் அந்த நேரம் பாத்து ஒரு அம்மா அதிர்ஷ்டவசமா  டீ வீ எஸ் எக்செல் சூப்பர்ல வந்தாங்க.. அவங்க உதவி பண்ணி தங்கச்சிய பரிட்சைக்கு சரியான நேரத்துல கொண்டு போய் விட்டாங்க.. அதுக்கு அப்பறம் தங்கச்சி பஸ்லயே தான் பள்ளிக்கூடத்துக்கு போனா..


உலகம் போன போக்குல நானும் இப்போ வெளிநாட்டுல வந்து எல்லாத்தையுமே மறந்துட்டு வெக்கமே இல்லாம ஆடம்பரமா இருக்கறேங்க.. இப்போ எந்த கார் வேணாலும் வாடகைக்கு எடுத்து ஓட்டலாம், ட்டிருக்கேன்.. இருந்தாலும் பச்ச கிளி தாங்க மனசுல நிக்குது.. ரொம்ப நாள் களிச்சு மாமா கிட்ட பேசினேன்.. அப்போ வண்டிய ஒருத்தர்க்கு சும்மா குடுதுட்டேன்னு சொன்னாரு.. பின்ன யாருங்க காசு குடுத்து வாங்குவா?.. நான் வாங்குவேங்க..





Saturday, December 24, 2011

என் முதல் வளர்ப்பு...

நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன். ஒரு கோடை விடுமுறை தினத்தில் வழக்கம் போல் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தேன். அன்று தான் என் உயிராகப் போகவிருக்கும் என் அருமை பூனைக்குட்டியை முதன் முதலில் கண்டேன். மைதானத்திற்கு பக்கத்தில் இருக்கும் கூட்டுறவு விற்பனை நிலையம் அருகே தான் அவன் சுற்றிக் கொண்டிருந்தான். அப்பொழுது தான் கண் திறந்திருந்தான். தாயையும் சகோதர சகோதரிகளையும் காணவில்லை. தனியாக சுற்றிக்கொண்டிருந்தான். எதிர் வீட்டு கிருஷ்ணா தான் முதலில் அவனை எடுத்தான். சற்று நேரம் அவனோடு விளையாடினோம். சாம்பல் நிறத்தில் கறுப்பு திட்டுகளுடன் சிமெண்ட் ஜல்லி கலவை போல அழகாய் இருந்தான். உடன் விளையாடிய நண்பர்கள் அனைவரும் பூனையை இப்படியே விட்டு விட்டால் இறந்து விடும் என்று கூறினார்கள். கழுகோ, காக்கையோ கொத்தி விடும் என்றார்கள். எனக்கும் கிருஷ்ணாவிற்கும் அவனை விட்டுச் செல்ல மனம் வரவில்லை. குட்டியை கிருஷ்ணாவின் வீட்டிற்கு எடுத்துச் சென்றோம்.. தொட்டாங்குச்சியில் பால் கொடுத்தோம். சிறிது நேரம் விளையாடினோம். கிருஷ்ணாவின் வீட்டில் பூனையை வைத்துக் கொள்ள மறுத்து விட்டார்கள்.



நான் எடுத்துக்கொள்கிறேன் என்று தைரியமாக என் வீட்டிற்க்கு அவனை எடுத்து வந்து விட்டேன். என் அப்பாவிற்கு மிருகங்களை அவ்வளவாக பிடிக்காது. அம்மாவிற்கு மிருங்கங்களின் மீது கொள்ளை பிரியம். அதுவும் பூனை என்றால் சொல்லவே வேண்டாம்.. நாள் முழுக்க அதனுடனே இருப்பார்கள். அப்பொழுது நான், அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா என்று கூட்டுக் குடும்பமாக இருந்தோம். பாட்டியுடன் தான் அதிக நேரம் செலவளித்தேன். பாட்டி என்றுமே என்னை திட்டியது இல்லை. அவர்களிடம் தான் முதலில் பூனையை காட்டினேன்.. பால் வைத்தார்கள்.. அவனுடன் கயிரை வைத்து விளையாடினார்கள்.. அவனுக்கு ஏனோ நாங்கள் பெயர் வைக்கவே இல்லை. அவன் வந்த பிறகு எனது மற்ற வேலைகள் அனைத்தையும் பின்னுக்கு தள்ளி விட்டேன். வீட்டுப் பாடங்களை கட கடவென எழுதி விட்டு அவனுடன் விளையாடிக் கொண்டே இருந்தேன். உறங்கும் பொழுதும் என்னுடன் படுக்க வைத்துக் கொள்வேன். எனக்கு அருகில் அவனை படுக்க வைப்பேன். காலையில் பார்த்தல் என் கால்களுக்கு இடையில் போர்வை மேலே சொகுசாக படுத்துக்கொண்டிருப்பான். கொஞ்சம் புரண்டாலும் செல்லமாக கடிப்பான். அவன் தாய் இல்லாமல் வளர்ந்ததால் அவன் கற்றுக்கொண்டது அனைத்துமே எங்களை பார்த்துத் தான். கழிவறையில் தான் கடன் கழிப்பான். தலையணையில் தலையை மட்டும் வைத்து மனிதர்களைப் போலவே உறங்குவான். என் கால்களை உரசிக்கொண்டே கவனம் கேட்பான். ஒரு நாளும் பால் திருட மாட்டான். அதற்கு அவசியமும் ஏற்படவில்லை.

சில சமையங்களில் மரம் ஏறி கீழே இறங்க முடியாமல் தவிப்பான். நானும் தங்கையும் சில குரங்கு வேலைகள் செய்து அவனை இறக்கி விடுவோம். எந்த நேரமும் அவனை நாங்கள் யாரவது ஒருவர் கண்காணித்துக் கொண்டே இருப்போம். தெருவில் நாய்கள் நடமாட்டமும் அதிகம் இருந்ததால் வீட்டின் கேட்டிற்கு நானும் அம்மாவும் கம்பி கட்டி தடுப்பு அமைத்தோம்.
அதுவும் என் எதிர் வீட்டில் நாய்கள் வளர்த்தி, பயிற்சி அளித்து விற்பனை செய்து வந்தார்கள் இரண்டு சகோதரர்கள். அவர்கள் வீட்டிலும் நிறைய நேரம் நாய்களுடன் விளையாடிக் கொண்டிருப்பேன். அவர்கள் மூலம் தான் நாய்களின் பல ஜாதிகளை அறிந்து கொண்டேன். ஸ்டெபி என்று ஒரு லப்ரடோர் ரெட்ரீவர் (Labrador Retriever) இருந்தாள். சகோதரர்கள் இருவருக்கும் ஸ்டெபி க்ராப்ப் மீது கொள்ளை பிரியம். அது தான் பெயர் காரணம். அவளுடன் ஆவலுடன் நாங்கள் அனைவரும் விளையாடுவோம். இப்பொழுதெல்லாம் பூனை மீது தான் கவனம். ஸ்டெபியை மறந்தே விட்டேன்.

அன்றும் வழக்கம் போல் பள்ளி முடிந்து மாலை பூனையுடன் விளையாட ஆவலாய் ஓடி வந்தேன். வந்ததும் பாட்டி தேநீர் மற்றும் மேரீ பிஸ்கட்டுடன் காத்திருந்தார்கள். பூனை எங்கே என்று கேட்டேன். அது இங்கு தான் சுற்றிக் கொண்டிருக்கும் என்றும், முதலில் சாப்பிடுமாறும் கூறினார்கள். மாலை சிற்றுண்டியை சுவைத்து விட்டு பூனையை தேடி புஸி புஸி என்று வீடு முழுக்க கூவிக்கொண்டே ஓடினேன். அவனை காணவில்லை. ஒவ்வொரு அறையையும் அலசி ஆராய்ந்தும் அவன் கிடைக்கவில்லை. ஒரு வேளை மரத்தின் மேல் ஏறி இறங்க முடியாமல் தவித்துக் கொண்டிருப்பானோ என்று எண்ணி மரங்களின் மீது ஏறித் தேடினேன். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. எனக்கு ஒரே அழுகையாய் வந்தது. சிறிது நேரம் கழித்து தான் பாட்டி விஷயத்தை உடைத்தார்கள். நான் பள்ளிக்கு சென்றதும் அப்பா பூனையை ஒரு பையில் போட்டுக்கொண்டு போய் பத்து கிலோமிட்டர்களுக்கு அப்பால் விட்டு விட்டு வந்துவிட்டார் என்று கூறினார்கள். நான் செய்வது அறியாது தவித்தேன். அப்பா என்றால் எனக்கு பயம். அப்பாவிடம் ஏன் என்று கேட்க துணிவு இல்லை. வயிற்றில் ஒரு முடிச்சு விழுந்தது போன்ற உணர்வு. என் பிரியமான ஜியோமெட்ரி பாக்ஸை ஒரு முறை தொலைத்த பொழுது ஏற்பட்ட அதே முடிச்சு. அவன் என் முதல் வளர்ப்பு. மனது பாரமாக இருந்தது.

இரண்டு நாட்கள் மிகவும் துயரத்தில் இருந்தேன். பின்பு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். மூன்றாவது நாள் காலை எழுந்து பால் வாங்க வெளியே சென்றேன். அப்பொழுது தான் எதிர் வீட்டுச் சகோதர்களின் அம்மா என்னை கூப்பிட்டார்கள். நான் அவர்கள் வீட்டிற்குள்ளே நுழைந்து கண்ட காட்சியை இன்றும் மறக்க முடியாது. என் அருமை பூனை அங்கு எனக்காக காத்திருந்தான். "காலைல ஸ்டெபி ரொம்ப குரைச்சா. போய் பாத்த இது செவுத்து மேல உக்காந்திருக்கு. அப்பறம் தான் உன் பூனை மாதிரி இருக்கேன்னு இங்க புடிச்சு வெச்சிருந்தேன்." என்றார்கள். நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. ஸ்டெபி மீண்டும் குரைத்தாள். அவனை தூக்கிக் கொண்டு வீட்டை நோக்கி ஓடினேன்.

பாட்டியிடம் எடுத்துச் சென்றேன். "டேய் இவன் கில்லாடி பூனை டா. மரம் ஏற தெரியலனாலும், எவளோ நாய்கள் கிட்ட இருந்து தப்பிச்சு, நாய் விக்கறவங்க வீட்டுக்கே வந்திருக்கான் பாரு." என்று துணியால் அவனை துடைத்து விட்டுப் பால் வைத்தார்கள். அப்பா என்ன சொல்வாரோ என்ற பயம் இருந்து கொண்டே இருந்தது. காலை நடைப்பயிற்சி முடித்துக் கொண்டு வீடு திரும்பிய அப்பாவிற்கு நான் பூனையுடன் விளையாடிக் கொண்டிருந்ததை கண்டதும் அதிர்ச்சி. "என்னடா ஸ்கூலுக்கு கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்க. போய் தயார் ஆகு" என்றார். நான் ஏக்கத்துடன் பூனையை பார்த்தேன். அவனும் முழித்துக் கொண்டிருந்தான். வெளியே வந்த அம்மாவிடம், "இனிமேல கூடுதலா கால் லிட்டர் பால் வாங்கிக்கலாம்." என்று புன்னகைத்தார் அப்பா.

Monday, June 14, 2010

தட்டி விலாஸ்

தட்டி விலாஸில் எப்பொழுது சாப்பிட ஆரம்பித்தேன் என்று நினைவில்லை. உலகத்திலேயே என் அம்மா சமையலுக்கு பிறகு நான் விரும்பி சாப்பிட்டது தட்டி விலாஸில் தான். அதை நடத்திக் கொண்டிருந்தது கன்னடம் பேசும் ஒரு கூட்டு குடும்பம். அவர்கள் உணவகத்திற்கு பெயர் சூட்டவில்லை. 'தட்டி விலாஸ்' என்பது நாங்கள் சூட்டிய பெயர். அறுபதில் இருந்து எழுபது வயதிற்குள் இருக்கும் தம்பதியர், அவர்களின் மூன்று பெண்பிள்ளைகள் மற்றும் ஒரு ஆண்பிள்ளை என கூட்டமான குடும்பம் அது. இரண்டு பெண்களுக்கு திருமணம் ஆகி பிள்ளைகளும் இருந்தனர். மூத்த பெண் திருமணம் ஆன பின்பு மாப்பிள்ளை வீட்டில் குடிபெயர்ந்து விட்டாள். இரண்டாவது பெண் தன் கணவருடன் தட்டி விலாஸில் தான் வசித்து வந்தாள். இளைய மகன் எங்கோ வேலை செய்து கொண்டிருந்தான். இவர்கள் அனைவரையும் விட மிக முக்கியமானவர் மூன்றாவது பெண்ணாகிய சியாமளா அக்கா. இவர்களுடன் ஒரு பூனை, நான்கைந்து ஆடுகள் மற்றும் கோழிகளும் வசித்து வந்தன.





அவர்களை பற்றி மேலும் காணும் முன் தட்டி விலாசை சற்று காண்போம். தென்னங்கீற்றால் கான்க்ரீட் சுவரின் மீது எழுப்பப்பட்ட கூரை. தரை முழுவதும் மாட்டு சாணத்தால் மெழுகப்பட்டிருக்கும். ஆங்காங்கே தரையில் மர மேசைகளும், இருக்கைகளும் பதிக்கப் பட்டிருக்கும். முன் சுவற்றில் சதுர வடிவில் ஒரு நுழைவாயில். கதவு கிடையாது. இரவு உறங்கும்முன் வாயிலை துணியால் மூடிக்கொள்வார்கள். உள்ளே நுழைந்தவுடன் வலப்பக்கம் தேநீர், காபி போட வசதியாக மேசை, அதன் மீது ஒரு குமுட்டி அடுப்பு, கண்ணாடி டம்ளர்கள், வடிகட்டி மற்றும் பாத்திரம் கழுவ தோதான மூலை. மூத்தவர் அப்பாதான் அதன் பொறுப்பாளர். சற்று முன் நகர்ந்தால் கண்ணாடி மற்றும் அடுக்குகள் பொருத்தப்பட்ட மேசை. அதன் மீது அடுக்கடுக்காக வாழை இலைகள், பார்சல் கட்ட தேவை படும் காகிதங்கள், பாலிதீன் பைகள் மற்றும் நூல்கண்டு. பார்சல் காகிதங்கள் பெரும்பாலும் தினதந்தியாக இருக்கும். அவர்கள் தினத்தந்தியை தினமும் வாசிக்கவும், பார்சல் கட்டவும் உபயோகிப்பார்கள். கூடவே கல்லாப்பொட்டியும் இருக்கும். இதன் பொறுப்பாளர் சியாமளா அக்கா தான். வேறு யாரும் நெருங்க மாட்டார்கள். அதை தொடர்ந்து சாப்பிட உட்கார மேசைகள் மற்றும் நாற்காலிகள். மேலும் முன் சென்றால் நுழைவாயிலுடன் ஒரு தடுப்புச் சுவர். அதன் ஊடே இரண்டு சிறிய அறைகள். முதல் அறையில் சமையல் வேலை நடக்கும். சமைக்க பெரும்பாலும் விறகுகளையே பயன்படுத்துவார்கள். இரண்டாம் அறையில் தான் அனைவரும் உறங்குவார்கள். ஒரு தொலைகாட்சிப் பெட்டியும் அங்கு துணைக்கு இருந்தது.

எந்த இடத்தில் உட்கார்ந்து பார்த்தாலும் தெரிகிற மாதிரி, உணவு அட்டை நுழைவாயிலிற்கு அருகே தோதான இடத்தில் மாட்டப்பட்டிருக்கும். இட்லி 1.50, தோசை 4, வெங்காய ஊத்தாப்பம் 5.50, ஆம்லெட் 3, அளவு சாப்பாடு 14, தேநீர் 2, காபி 3, பால் 3. இது சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு. நாங்கள் வசித்த பகுதி நகரத்திற்கு அப்பால் இருந்ததால் மக்கள் குறைவாகவே தென்படுவர். தட்டி விலாஸ் தான் எங்கள் பகுதியின் பிரதான மையம். உணவகத்திற்கு அனைத்து வித மக்களும் வந்து போவார்கள். நிறைய விசுவாசிகளும் உண்டு, நான் உள்பட. குறிப்பாக பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள். காலை ஏழு மணி முதலே இவர்கள் வர தொடங்கிவிடுவார்கள். சியாமளா அக்காதான் அனைவருக்கும் இலை போடுவாள், பரிமாறுவாள், கணக்கெழுதுவாள். சமைப்பது இரண்டாவது பெண் மற்றும் அம்மா. சியாமளா அக்கா சலிக்காமல் அனைவரிடமும் அன்பாக பேசி, பறவையாக பறந்து வேலை செய்வாள். சட்டை, பாவாடை அணிந்திருப்பாள். எண்ணெய் தடவி வழித்து வாரி பின்னப்பட்ட குறைவான தலைமுடி. எவ்வளவு பேர் வந்தாலும், யார் என்ன வாங்கினார்கள் என சரியாக ஞாபகம் வைத்து கணக்கும் போட்டு கச்சிதமாக வியாபாரம் செய்வாள். அவர்கள் ஏழைகளாக இருந்து, குடும்பத்தின் கூட்டு முயற்சியால் ஓரளவுக்கு முன்னேரி இருந்தார்கள். இரவு நேரங்களில் குடிகாரர்களும் வருவார்கள். சிலர் வாயிலெடுத்தும் பார்த்திருக்கிறேன். முகம் சுழிக்காமல் வேலை செய்வாள் சியாமளா அக்கா.



நானும் என் தங்கையும் அடிக்கடி அங்கு சாப்பிட செல்வோம். இருபது ரூபாயில் இருவரும் வயிறு முட்ட தின்றுவிடுவோம். முதலில் ஆவி பறக்க நான்கு இட்லி வாங்குவேன். தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி, சாம்பார் மற்றும் தக்காளி சட்னி. சியாமளா அக்கா தான் ஊற்றுவார். அதிகமும் ஆகாமல், குறையவும் அல்லாமல் சரியாக அளந்து ஊற்றுவார். அதன் சுவைக்கு ஈடு இணையே கிடையாது. கட கடவென விழுங்கி விடுவேன். எப்படித்தான் செய்வார்களோ. பின்னர் இரண்டு தோசைகள். முறுகலாக நேர்த்தியாக சுடப்படிருக்கும். சொர்க்கத்தை சுவைத்தது போல உணர்வேன். பின்னர் அம்மா, அப்பாவிற்கு பார்சல் கட்டிக்கொண்டு அடுத்தது எப்போ வரலாம் என்று யோசனை செய்து கொண்டே விடை பெறுவோம். பெரும்பாலும் சனிக்கிழமைகளில் மதியம் சாப்பாடு தட்டி விலாஸில் தான். அவர்களின் ரசத்திற்கு ஈடு இணையே கிடையாது. அப்பளம் கூட அமிர்தமாக இருக்கும்.




விடுமுறை நாட்களில், இரவு வேளைகளில் நண்பர்களுடன் தட்டி விலாஸில் ஒரு முறையும், வீட்டில் ஒரு முறையுமாக மாய பஜார் ரங்காராவ் போல வெளுத்து கட்டுவேன். எந்த நல்ல விஷயமும் ஒரு நாள் முடிவுக்கு வரவேண்டும் என்பது இயற்கையின் நியதி போலும். தட்டி விலாஸும் ஒரு நாள் மூடப்பட்டது. சியாமளா அக்கா திருமணம் செய்து கொண்டதாக சிலர் கூறினர். அவர்கள் சொந்த ஊருக்கே சென்று விட்டதாக கேள்விப் பட்டேன். மிகவும் வருந்தினேன். என் வாழ்வில் எதையோ இழந்ததை போல உணர்ந்தேன். அவர்களுக்கு பின்னர் எங்கள் பகுதியில் பல உணவகங்கள் வந்து சென்றன. ஒன்று கூட தட்டி விலாஸ் தந்த உணர்வை, சுவையை தரவில்லை.

காலம் சென்றது. நானும் வேலைக்காக பெங்களூருக்கு குடிபெயர்ந்தேன். இரண்டாவது முறையாக ஒரு கன்னட உணவகத்தில் சாப்பிட்டேன். சாம்பார் இனித்தது, இட்லி கசந்தது. சுத்தமாக பிடிக்கவில்லை. எனக்கு தட்டி விலாஸின் ஞாபகம் மீண்டும் மீண்டும் வந்தது, இன்றும் வருகிறது.

Sunday, June 06, 2010

பூக்காரப் பாட்டி

எனக்கு நினைவு தெரிந்த காலம் முதல் அந்த மூதாட்டியை அறிவேன். காலை ஏழு மணிக்கெல்லாம் எங்கள் தெருவிற்கு வந்து விடுவாள். ஒவ்வொரு வீடாக பூ வேண்டுமா என்று கேட்பாள். இடுப்பில் மரத்தால் பின்னிய ஒரு கூடை. பக்கத்தில் இருந்து கவனித்தால் அந்த கூடை அவளை பாதி மறைத்திருப்பது தெரியும். உள்ளே அனைத்து வண்ணங்களிலும் பூக்கள் இருக்கும். அரளிப்பூ, துளசி மாலை, மல்லிகை, முல்லை மற்றும் சங்குப்பூ என் பல வகைகள் கூடையில் சங்கமிக்கும். கூடையின் விளிம்பில் கையிற்றால் கட்டிய ஒரு அக்ஸா ப்ளேடு. காலில் செருப்பு கிடையாது. ஒரு வெள்ளை சீலை மட்டும் அணிந்திருப்பாள். வயது அறுபதை கடந்திருக்கும் என்பது என் யூகம்.



என் பாட்டி தினமும் அவளிடம் பூ வாங்கி சாமி படங்களுக்கும், வீட்டின் பிரதான அறையில் தொங்கிக் கொண்டிருக்கும் என் கொள்ளுத் தாத்தாவின் படத்திற்கும் சாத்துவாள். கொள்ளுத் தாத்தா திப்பு சுல்தான் அரண்மனையிலே பணியாற்றியவர் என்று பூ சாத்தும் ஒவ்வொரு முறையும் கூறுவாள் பாட்டி. பூக்காரப் பாட்டிக்கு நாங்கள் எவ்வளவு முழம் பூ வாங்குவோம் என்பது மனப்பாடம். கட கட வென கையில் முழம் போட்டு அக்ஸா ப்ளேடால் படக் என்று வெட்டித் தருவாள். கூட கொஞ்சம் கொசுரும் தருவாள். இந்த கொசுரு தரும் பழக்கம் ஒரு மிகப் பெரிய வியாபார உத்தி. வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் மற்றும் விசுவாசிகளாக மாற்றி விடும். என் பாட்டியும் விதிவிலக்கல்ல. இரண்டு மூதாட்டிகளும் சிறிது நேரம் உரையாடிக் கொள்வார்கள். என்ன தான் பேசுவார்களோ தெரியவில்லை. ஓரிரு சமயம் ஒட்டுக்கேட்டிருக்கிறேன். பூக்காரப் பாட்டி தன் மகனைப் பற்றி எதாவது கூறிக்கொண்டிருப்பாள். என் பாட்டி ஆறுதல் படுத்துவாள்.

ஒரு நாள் சாயங்காலம் காந்திபுரம் லாலா கடைக்கு அம்மாவுடன் சென்றிருந்தேன். ஒரு கிழக் குரல் எங்களை அழைத்தது. பூக்காரப் பாட்டி அங்கே தன் பேத்தியுடன் வியாபாரம் செய்து கொண்டிருந்தாள். அப்பொழுது எனக்கு ஒரு பதினைந்து பதினாறு வயதிருக்கும். அவள் பேத்திக்கும் என் வயது தான் இருக்கும் என்று உருவத்தை பார்த்து எடை போட்டுக் கொண்டேன். பேத்தி காலையில் பள்ளிக்கூடம் போவதாகவும் மாலையில் தனக்கு உதவுவதாகவும் பாட்டி கூறினாள். அவர்கள் மீது ஒரு வித பரிதாபம் ஏற்பட்டது. பிளாட்பாரத்தில் பாட்டியின் அந்த மரக்கூடை இருந்தது. கூடவே அதன் சகோதரிகளைப் போல் வேறு இரண்டு கூடைகள் இருந்தன. பழுப்பு நிறமாக மாறி இருந்த ஒரு வெள்ளைத் துண்டு தான் அவர்கள் இடம். அதன் மீது தான் நாள் முழுக்க அமர்ந்து வியாபாரம். ஈயத்தால் ஆன ஒரு தூக்கு போசி காலியாக கமுத்தி வைக்கப்பட்டிருந்தது. அருகே அழுக்கு படிந்த தண்ணி பாட்டில். பாட்டி காலையில் எங்கள் நகரில் வியாபாரத்தை முடித்து விட்டு காந்திபுரம் வந்து நாள் முழுக்க பிளாட்பாரத்தில் அமர்ந்து பூ விற்பாள் என்று அம்மா சொன்னாள். அவர்கள் லாலா கடையில் இது வரை எதாவது வாங்கியிருப்பார்களா என்றொரு கேள்வி எழுந்தது.



இந்த காட்சி அன்று என்னை பெரிதாக பாதிக்கவில்லை. அன்று நான் வெளி உலகம் அறிந்திருக்கவில்லை. நான் கல்லூரிப் படிப்பு முடித்து வேலைக்கு கோவையை விட்டு செல்லும் வரையிலும் பாட்டி பூ விற்றுக்கொண்டிருந்தாள். கடந்த சில வருடங்களாக விடுமுறைக்கு கோவை வந்த பொழுது பாட்டியை காணக் கிட்டவில்லை. வெளி உலகம் ஓரளவு பரிச்சயமான பிறகு என் மனதில் அந்த மூதாட்டியைப் பற்றி பல எண்ணங்கள் தோன்றுகின்றன. பாட்டிக்கு பூக்கள் எங்கிருந்து கிடைக்கின்றன? அவளது ஒரு நாள் சராசரி வருமானம் எவ்வளவு இருக்கும்? அவள் வீடு குடிசையா அல்லது பிளாட்பாரம் தானா? உடல் கழிவுகளை எவ்வாறு நீக்குவாள்? உழைக்க உடம்பு நெளியாத நான் அந்த மூதாட்டியின் முன் எம்மாத்திரம்? தன் மக்கள், பேத்திகளுக்கு எம்மாதிரியான இடங்களில் திருமணம் செய்து வைப்பாள்? கணவன் (கிழவன்) உயிருடன் தான் இருக்கிறானா? இவ்வளவு சுலபமாக வித விதமாய் எப்படி பூ
கட்டுகிறாள்? நான் பூ கட்ட பல முறை முயன்று தோற்றுப் போயிருக்கிறேன். மின்னல் வேகத்தில் சரியான விகிதத்தில் பூக்கள் பொறுக்கி முடிச்சு போடுவதற்கு பின்னால் எத்தனை நியுரான்களின் பாய்ச்சல். அது ஒரு கலை என்பது என் அபிப்ராயம்.

அந்த மூதாட்டியின் உலகம் தான் எவ்வளவு சுருங்கியது. பிளாட்பாரம், சாலைகள், பூக்கள், நூல், நாளை சூரியன் உதிக்கும் என்கிற ஒரு நம்பிக்கை. மனமென்னும் அட்சயபாத்திரம் அள்ளித் தரும் உற்சாகம் மட்டுமே மூலதனம். சுருக்குப் பையில் சில சில்லறைகள் மற்றும் வெற்றிலை. அவளின் வாழ்கை முறையை நினைத்தால் இன்றும் வியப்புகுள்ளாகிறேன். இயற்கையை அவ்வளவாக தீண்டாத எளிய வாழ்க்கை. உழைத்து நிம்மதியாக உறங்கும் ஜீவன். என்னுள் எழுந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க அந்தக் கிழவி இன்று உயிருடன் இருக்கிறாளா என்று தெரியவில்லை.

எனக்கு மாலை சாத்தும் பழக்கம் கிடையாது. கடவுள் நம்பிக்கை இல்லாதது ஒரு காரணம். ஆனாலும் யாரேனும் பூ விற்றால் ஒரு முழமாவது வாங்கிவிடுவேன். அது நான் அவர்கள் உழைப்புக்கு செலுத்தும் மரியாதை. பாட்டிக்கு செலுத்தும் மரியாதை. பூ கட்டும் கலைக்கு செலுத்தும் மரியாதை.

Friday, May 28, 2010

பயம்


கிரேஹௌண்ட் (Greyhound), வட அமெரிக்காவின் மிகப் பெரிய போக்குவரத்து நிறுவனம். சுமார் 2300 நகரங்களை இணைக்கும் பேருந்து சேவை அளிக்கும் நிறுவனம். அருகில் உள்ள நகரத்துக்கு செல்ல கிரேஹௌண்டை இரண்டு காரணங்களுக்காக தேர்வு செய்தேன். ஒன்று, குறைந்த கட்டணம். இரண்டு, வேறு வழி இல்லை.

பத்து மணிக்கு புறப்படும் பேருந்தை பிடிக்க ஒன்பது மணிக்கெல்லாம் ஆஜர் ஆகும் படி பயணச்சீட்டில் குறிப்பிட்டிருந்தார்கள். நேரத்தை கடை பிடிப்பதில் ஜெர்மானியர்களைப் போல இருக்க வேண்டும் என்று எனக்கு நானே விதித்துக் கொண்ட கட்டளையின் பேரில் எட்டே முக்காலுக்கு ஆஜர் ஆனேன். பயணச்சீட்டை காண்பித்து போர்டிங் பாஸும் வாங்கி ஆகி விட்டது. பேருந்து புறப்பட ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இருக்கிறதே என்று கையில் இருந்த 'Surely you are joking Mr. Feynman' புத்தகத்தை ஐந்தாவது முறையாக படிக்க ஆரம்பித்தேன். இந்தப் புத்தகத்தை முதல் முறை வாசித்த பொழுதே எனது அங்கங்களுக்குள் ஒன்றாகி விட்டிருந்தது. புத்தகங்களை இரவல் குடுக்கும் விஷயத்தில் நான் மகா கஞ்சன். என்னிடம் ஏழைகள் யாரும் இரவல் கேட்பதில்லை. கேட்பவர்கள் அனைவரும் குறைந்தது இருபது ஆயிரம் மாதச் சம்பளம் வாங்கும் கணிப்பொறி கிராக்கிகள் தான்.

சரி விஷயத்திற்கு வருகிறேன். மேற்கூறிய கஞ்சத்தனத்தால் தான் இந்த புத்தகம் ஐந்து ஆண்டுகளாக என்னிடம் இருக்கிறது. படிக்க ஆரம்பித்த பொழுது கவனம் சிதறிக் கொண்டே இருந்தது. காரணம் மக்கள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தார்கள். மக்களில் தொண்ணூறு சதவிகிதம் ஆப்ரிக்க அமெரிக்கர்கள். இனவாதத்தை அடியோடு வெறுப்பவன் நான். ஆயினும் அவர்களை பார்க்க பார்க்க உள்ளே ஒரு வித பயம் மேலும் கீழும் உருண்டது. உயிர் மேல் ஆசை இருந்தால் கருப்பர்கள் என்ன கேட்டாலும் கொடுத்து விடு என்று நண்பர்கள் எச்சரித்தது நினைவுக்கு வந்தது.

எனது பயத்தை நினைத்து வெட்கினேன். ஆனால் அந்த உணர்வை அடக்க முடியவில்லை. கட்டுப்படுத்த முடியாத இனவாத உணர்வு. பயணிகள் அனைவரிடமும் ஒரு ஒற்றுமை இருந்தது. அனைவரும் சாதாரண உடை அணிந்திருந்தார்கள். சிலர் மங்கிய உடை அணிந்திருந்தார்கள். அமெரிக்காவில் சாதரணமாக காணப்படும் ஆடம்பரம் அவர்களிடம் இல்லை. நிறைய பேர் புகைப் பிடித்தனர். ஒருவன் நெருப்பு இருக்கிறதா என்று என்னிடம் கேட்டான். நான் இல்லை என்று தலை ஆட்ட முறைத்துக் கொண்டே விலகிச் சென்றான். அனைவரும் கார் இல்லாத ஏழைகள் என்று ஒரு கோட்பாட்டை உருவாக்கிக் கொண்டேன்.

ஏன் இவர்களில் நிறைய பேர் ஏழையாக இருக்கிறார்கள் என்ற ஒரு கேள்வி எழுந்தது. அவர்கள் வளரும் சூழல் ஒரு மிகப் பெரிய காரணமோ?. சுற்றிலும் படிப்பறிவு இல்லாதவர்கள் இருப்பின் ஒருவன் படிக்க செல்வது முடியாத காரியம். ஏன் நிறைய பேர் திருடுகிறார்கள்?
'A Scanner Darkly' திரைப்படத்தில் வரும் ஒரு வசனம் நினைவிற்கு வந்தது.
'சக்கரை வியாதி உள்ள ஒருவன் இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அவன் உயிர் வாழ இன்சுலின் வாங்கியே ஆக வேண்டும். அவனிடம் காசு இல்லை என்றால் என்ன செய்வான்? அடுத்தவனிடம் இருந்து பிடுங்கியாவது இன்சுலின் வாங்க நினைப்பான்'.

மறுக்கப் பட்டவர்கள் மடிவார்கள் அல்லது உலகத்திடம் இருந்து பிடுங்கிக் கொள்வார்கள். ஆய்த எழுத்து திரைப்படத்தில் இன்பா கூறும் ஒரு வசனம், 'இந்த உலகம் எனக்கு எதுவுமே குடுக்கல. எல்லாமே நானா புடுங்கி எடுத்து கிட்டது தான்.' ஏன் இவர்கள் மறுக்கப் படுகிறார்கள்? இந்த கேள்விக்கு ஓராயிரம் பதில்கள் இருக்கலாம். எனக்கு சரியான காரணம் தெரிய வில்லை.

மணி பத்தாகி விட்டிருந்தது. தோதான இருக்கையாக தேடித் பிடித்து அமர்ந்தேன். புத்தகத்தில் ஆழ்ந்தேன். ஒரு மணி நேரப் பயணத்திற்கு பிறகு பேருந்து ஒரு இடத்தில் நிறுத்தப் பட்டது. அனைவரும் இறங்கிப் போனார்கள் என்னைத் தவிர. என் பையில் மடிக்கணினி மற்றும் உடைகள் வைத்திருந்தேன். அவற்றை விட்டு விட்டு போக மனம் இல்லை. வந்த சிறுநீரை அடக்கிக் கொண்டு புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். இன்னும் இரண்டு மணி நேரப் பயணம் தான். பின் போய்க் கொள்ளலாம் என்கிற ஆறுதல்.

அப்பொழுது ஒருவன் பக்கத்தில் வந்தமர்ந்தான். அவசரமாக ஒருவரை அழைக்க வேண்டும் என்று எனது கைப்பேசியை கேட்டான். வேறு வழி இல்லாமல் எனது கைப்பேசியை கொடுத்தேன். வாங்கியவன் சிக்னல் சரியில்லை என்று கூறி கிழே இறங்கி சென்றுவிட்டான். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இறங்கி அவனை பின் தொடரலாமா? பையில் கணினி வேறு இருக்கிறது. அதையும் எடுத்துச் செல்லலாமா? கைப்பேசி போயே போச்சா? ஐயையோ பேருந்தை இப்பொழுது எடுத்து விடுவானே. ஓட்டுனர் கூட வந்தாயிற்றே. இதயம் பட படக்க செய்வதறியாது முழித்தேன். பேருந்தும் எடுத்தாகிவிட்டது. கிளம்பும் வேளையில் ஆசாமி திரும்பி வந்துவிட்டான். நன்றி கூறி கைப்பேசியை திரும்ப கொடுத்து விட்டான்.

அவனை நம்ப மறுத்ததற்காக மனம் வருந்தினேன். இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு சேருமிடம் வந்தடைந்தேன். மூன்று மணி நேரமாக என் கணினியை வெளியே எடுக்க நினைத்து எடுக்கவே இல்லை. பயந்து பயந்து ஒரு வழியாக வந்தாயிற்று. அழைத்து செல்ல வந்த நண்பன் பயணத்தைப் பற்றி விசாரித்தான். அவனது ஒரு பயம் நிறைந்த கிரேஹௌன்ட் பயணத்தை நினைவு கூர்ந்தான். தனி மரம் அல்ல ஒரு தோப்பே என் உணர்வுகளை பகிர்கிறது போலும். அந்த நிகழ்வுக்கு பிறகு இரண்டு முறை கிரேஹௌண்டில் பயணம் செய்து விட்டேன். ஆயினும் ஆப்ரிக்க அமெரிக்கர்களை கண்டால் ஒரு வித பயம் ஏற்படுவது தொடர்கிறது. அதை உணரும் போதெல்லாம் வெட்கித் தலைகுனிகிறேன். இந்த பயம் கலந்த இனவாத உணர்வை என்னால் வெல்ல முடியாததை நினைத்து வருந்துகிறேன். நிச்சயம் என்னை மாற்றிக்கொள்வேன்.