சாதத்துடன் சேர்த்து பொறுமையையும் கட்டிக்கொண்டு அலுவலகம் செல்ல தயாரானான். ஐ போட் வாயில் கேட்பொறியை சொருகி காதில் மாட்டிக்கொண்டான். சத்தத்தை கூடுமானவரை கூட்டினான் . உலகம் நிசப்தம் ஆனது. ஜெர்சி சிட்டி நியூபோர்ட் பாத் (PATH) ரயில் நிலையத்தை அடைந்தான். நியூயார்க் செல்லும் ரயில் வந்ததும் நெரிசலில் உள்ளே சென்று சொருகிக்கொண்டான். என். பி. ஆர். உடைய ஆஸ்க் மீ அனதர் பொட்காஸ்ட் ஒலித்துக்கொண்டிருந்தது. ரயில் மீன் போல ஹட்சன் நதிக்கடியில் நீந்தி நியூ யார்க்கை அடைந்து கொண்டிருந்தது.
ஒவ்வொரு நிறுத்தத்திலும் ரயிலின் பாரம் குறைந்து கொண்டு இருந்தது. மன்ஹட்டனின் 33ஆம் தெரு நிறுத்தம் வந்தவுடன் பாதளத்தில் இருந்து வெளி உலகிற்கு வரிசையில் நின்று படிகளை கடந்து வந்தான். வெளி எங்கிலும் மக்கள் வெள்ளம். ஹெரல்ட் சதுக்கம் முழுவதும் சுற்றுலா பயணிகள். எம்பயர் ஸ்டேட் கட்டிடம் செல்லும் கூட்டம், மேசிஸ் மற்றும் இன்ன பிற கடைகளில் தள்ளுபடியில் வாங்கிக்கொண்டே இருக்கும் பெரும் கூட்டம். காலணி, காதணி, கழுத்தணி என அனைத்து அணிகளையும் ஒரு பிளாஸ்டிக் பையில் அடைத்து எறும்புகள் போல தூக்கிக்கொண்டு நடந்து கொண்டே இருந்தார்கள். நாளை உலகம் அழியும் என்றாலும் இன்று தள்ளுபடியில் பொருட்கள் வாங்கிக்கொண்டுதான் இருப்பார்கள். 34ஆவது வீதியில் திரும்பி பார்க் அவென்யு நோக்கி பாம்பு போல நெளிந்து நடந்து ஓடினான். தினமும் காலையில் அவன் அலுவலகத்தில் ஒரு ஆலோசனை கூட்டம் நடக்கும். புயலடித்தாலும் அந்த கூட்டத்திற்கு வந்துவிட வேண்டும். இல்லையென்றால் அவனது நிர்வாகி வேலையை விட்டு நிறுத்தவும் தயங்க மாட்டான்.
எம்பயர் ஸ்டேட் கட்டிடத்திற்கு அருகில் சுற்றுலா பயணிகளை வளைத்து போடும் நபர்கள் நின்று "எம்பயர் ஸ்டேட் மேலே செல்ல வேண்டுமா?" என்று கூவிக்கொண்டிருந்தார்கள். அவர்களை கண்டுகொள்ளாமல் தாண்டி பார்க் அவென்யு வந்தடைந்தான். அலுவலக கட்டிடத்திற்கு உள்ளே செல்ல அனுமதி பெற மின் அட்டையை ஒரு சிறிய கருவி முன் நீட்டினான். அது அதன் மொழியில் பீப் என்று உள்ளே போக அனுமதி அளித்தது. மின் தூக்கியின் உள்ளே சென்று 27 அருகில் உள்ள பொத்தானை அழுத்தினான். மின்தூக்கியில் பொருத்தி இருந்த கண்ணாடியில் தலைமயிரை சரி பார்த்தான். 27ஆவது மாடியில் இறங்கி நேராக ஆலோசனை கூட்டத்திற்குள் நுழைந்தான். வழக்கம் போல் கடைசி இருக்கையில் அமர்ந்து மறைந்தான். கைப்பேசியை தேய்த்து தேய்த்து அன்றைய செய்திகளை ப்ரீஃபிரன்டல் கார்டெக்ஸில் ஏற்றிக்கொண்டிருந்தான்.
அப்பொழுது கீழே சாலையில் இருந்து தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வண்டிகளின் ஒலி காதை கிழித்தது. வழக்கத்துக்கும் அதிகமாகவே ஒலிக்க அவன் மற்றும் இன்னும் சில பேர் கீழே நோக்கினார்கள். சாலை முற்றிலுமாக வெறிச்சோடிக் கிடந்தது. சில காவல் துறையினர் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தார்கள். அவன் உடனே ட்விட்டரை தட்டி விட்டு "34ஆம் சாலை நியூயார்க்" என்று தேடினான். எம்பயர் ஸ்டேட் கட்டிடம் அருகே துப்பாக்கிச்சூடு என்று பத்து பதினைந்து ட்வீட் தென்பட்டது. "மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு" என்று ஒருவர் விவரிக்க அனைவருமே ஒரு நிமிடம் வருத்தப்பட்டு தலை அசைத்து, கைகளை மேலே உயர்த்தி கீழே போட்டார்கள். நிர்வாகி "என்ன செய்வது?" என்று கூறிவிட்டு அன்றைய அலுவலக பிரச்சனைகளை பற்றி ஆலோசிக்கத் தொடங்கினான்.
சிறிது நேரத்தில் கூட்டம் முடிந்ததும் அருகில் உள்ள டன்கின் டோனட்ஸ் (Dunkin Donuts) செல்ல கீழிறங்கி வந்தான். வெளியே அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பி இருந்தது. எம்பயர் ஸ்டேட் கட்டிடம் அருகே எச்சரிக்கை என்று முத்திரை இடப்பட்ட மஞ்சள் பட்டைகளை கட்டியிருந்தார்கள். செய்திகளில் பொது மக்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டதாகவும், துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாகவும் கூறினார்கள். சம்பவம் காலை 9:03 க்கு நடந்தது. அவன் 9 மணி அளவில் தான் அந்த இடத்தை கடந்துசென்றிருந்தான். அதை நினைத்து சற்று பீதி அடைந்தான். மூன்று நிமிடம் தாமதித்திருந்தால்.. மீண்டும் அலுவலகம் சென்றான். அனைத்தும் வழக்கம் போல ஓடிக்கொண்டிருந்தது. அன்றைய வேலையில் மூழ்கி முத்தெடுத்து சோர்வடைந்து ஆறு மணிக்கு விடை பெற்று வீடு திரும்ப எத்தனித்தான். தன் மனைவிக்கு பிறந்த நாள் பரிசு வாங்க வேண்டும் என்று மூளை நினைவுறுத்தியது. ரயில் நிலையம் செல்லும் முன்பு மேசிஸ் சென்றான். தள்ளுபடியில் இரண்டு காதணிகளை வாங்கிக்கொண்டு எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தை பார்த்துக்கொண்டே நடந்தான்.
"This America, man"
