Tuesday, June 15, 2010

ஈவ்..



விடுமுறைக்கு அக்கா வீட்டிற்க்கு சென்றிருந்தாள் மாலதி. அக்கா பிரபா, சென்னையில் கணவருடன் சமீபத்தில் குடி பெயர்ந்திருந்தாள். அத்தான் பத்திரிகையாளர்.

"என்னடி ஒரு மாதிரியா இருக்கே?"

"அது ஒன்னும் இல்லக்கா. ரெண்டு நாள் முன்னாடி ஒரு போன் கால். எவனோ ஒருத்தன் என் பேரெல்லாம் கரெக்டா சொன்னான். அசிங்க அசிங்கமா பேசினான். நான் உடனே வெச்சுட்டேன். திரும்ப ரெண்டு மூணு தடவ கால் பண்ணான். அப்பறம் நான் அந்த நம்பர பிளாக் பண்ணிட்டேன். யாரா இருக்கும்னு தெரில." என்றாள் மாலதி.

"நம்பர பிளாக் பண்ணிடல்ல. இனி தொந்தரவு இருக்காது. இன்னொரு தடவ அந்த மாதிரி நடந்தா உடனே சொல்லு புகார் குடுத்துரலாம். புறப்படு. இன்னக்கி பாண்டிச்சேரி போறோம். மறந்து போச்சா."

"இதோ அஞ்சு நிமிஷம். ரெடி அய்டறேன்."

காலையே பாண்டிச்சேரி சென்று ஊர் சுற்றினார்கள். அத்தான் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களையெல்லாம் பட்டியல் இட்டு திட்டம் வகுத்திருந்ததால் பயணம் மாலதிக்கு இனிமையாக இருந்தது.

சென்னைக்கு திரும்புகையில் அத்தான் உறங்கி விட்டார். மாலதி அக்காவுடன் பேசிக்கொண்டே கார் ஓட்டினாள். தூக்கத்தில் அத்தான் அவ்வப்பொழுது பல்லைக் கடித்துக் கொண்டிருந்தார். இதைக் கண்ட மாலதிக்கு அதிர்ச்சியாக இருந்தது. அத்தான் அவ்வப்பொழுது ப்ரக்ஸிசம் (Bruxism) ஆல் அவதிப்படுவதாகவும், அதற்கு சிகிச்சை மேற்கொள்வதாகவும் அக்கா கூறினாள்.

அடுத்த நாள் கோவையில் அவசர வேலை இருப்பதாக கூறி அக்காவிடம் விடைபெற்று சென்றுவிட்டாள் மாலதி.

இரவு பிரபா தொலைபேசியில் அழைத்திருந்தாள். நலம் விசாரித்தாள். "உன் அத்தானோட கட்டுரை இன்னக்கி பத்திரிக்கைல வந்திருக்கு பாரு." என்று கூறி இணைப்பை துண்டித்தாள். மாலதி வாசிக்க மனமில்லாமல் பத்திரிக்கையை புரட்டினாள். "ஈவ் டீசிங்" பற்றி அத்தான் அருமையாக எழுதியிருந்தார். தன்னிடம் இரண்டு நாட்களுக்கு முன் தொலைபேசியில் உரையாடியவன் அவ்வப்பொழுது பல்லை கடித்துக் கொண்டதை மாலதியால் மறக்க முடியவில்லை.

Monday, June 14, 2010

தட்டி விலாஸ்

தட்டி விலாஸில் எப்பொழுது சாப்பிட ஆரம்பித்தேன் என்று நினைவில்லை. உலகத்திலேயே என் அம்மா சமையலுக்கு பிறகு நான் விரும்பி சாப்பிட்டது தட்டி விலாஸில் தான். அதை நடத்திக் கொண்டிருந்தது கன்னடம் பேசும் ஒரு கூட்டு குடும்பம். அவர்கள் உணவகத்திற்கு பெயர் சூட்டவில்லை. 'தட்டி விலாஸ்' என்பது நாங்கள் சூட்டிய பெயர். அறுபதில் இருந்து எழுபது வயதிற்குள் இருக்கும் தம்பதியர், அவர்களின் மூன்று பெண்பிள்ளைகள் மற்றும் ஒரு ஆண்பிள்ளை என கூட்டமான குடும்பம் அது. இரண்டு பெண்களுக்கு திருமணம் ஆகி பிள்ளைகளும் இருந்தனர். மூத்த பெண் திருமணம் ஆன பின்பு மாப்பிள்ளை வீட்டில் குடிபெயர்ந்து விட்டாள். இரண்டாவது பெண் தன் கணவருடன் தட்டி விலாஸில் தான் வசித்து வந்தாள். இளைய மகன் எங்கோ வேலை செய்து கொண்டிருந்தான். இவர்கள் அனைவரையும் விட மிக முக்கியமானவர் மூன்றாவது பெண்ணாகிய சியாமளா அக்கா. இவர்களுடன் ஒரு பூனை, நான்கைந்து ஆடுகள் மற்றும் கோழிகளும் வசித்து வந்தன.





அவர்களை பற்றி மேலும் காணும் முன் தட்டி விலாசை சற்று காண்போம். தென்னங்கீற்றால் கான்க்ரீட் சுவரின் மீது எழுப்பப்பட்ட கூரை. தரை முழுவதும் மாட்டு சாணத்தால் மெழுகப்பட்டிருக்கும். ஆங்காங்கே தரையில் மர மேசைகளும், இருக்கைகளும் பதிக்கப் பட்டிருக்கும். முன் சுவற்றில் சதுர வடிவில் ஒரு நுழைவாயில். கதவு கிடையாது. இரவு உறங்கும்முன் வாயிலை துணியால் மூடிக்கொள்வார்கள். உள்ளே நுழைந்தவுடன் வலப்பக்கம் தேநீர், காபி போட வசதியாக மேசை, அதன் மீது ஒரு குமுட்டி அடுப்பு, கண்ணாடி டம்ளர்கள், வடிகட்டி மற்றும் பாத்திரம் கழுவ தோதான மூலை. மூத்தவர் அப்பாதான் அதன் பொறுப்பாளர். சற்று முன் நகர்ந்தால் கண்ணாடி மற்றும் அடுக்குகள் பொருத்தப்பட்ட மேசை. அதன் மீது அடுக்கடுக்காக வாழை இலைகள், பார்சல் கட்ட தேவை படும் காகிதங்கள், பாலிதீன் பைகள் மற்றும் நூல்கண்டு. பார்சல் காகிதங்கள் பெரும்பாலும் தினதந்தியாக இருக்கும். அவர்கள் தினத்தந்தியை தினமும் வாசிக்கவும், பார்சல் கட்டவும் உபயோகிப்பார்கள். கூடவே கல்லாப்பொட்டியும் இருக்கும். இதன் பொறுப்பாளர் சியாமளா அக்கா தான். வேறு யாரும் நெருங்க மாட்டார்கள். அதை தொடர்ந்து சாப்பிட உட்கார மேசைகள் மற்றும் நாற்காலிகள். மேலும் முன் சென்றால் நுழைவாயிலுடன் ஒரு தடுப்புச் சுவர். அதன் ஊடே இரண்டு சிறிய அறைகள். முதல் அறையில் சமையல் வேலை நடக்கும். சமைக்க பெரும்பாலும் விறகுகளையே பயன்படுத்துவார்கள். இரண்டாம் அறையில் தான் அனைவரும் உறங்குவார்கள். ஒரு தொலைகாட்சிப் பெட்டியும் அங்கு துணைக்கு இருந்தது.

எந்த இடத்தில் உட்கார்ந்து பார்த்தாலும் தெரிகிற மாதிரி, உணவு அட்டை நுழைவாயிலிற்கு அருகே தோதான இடத்தில் மாட்டப்பட்டிருக்கும். இட்லி 1.50, தோசை 4, வெங்காய ஊத்தாப்பம் 5.50, ஆம்லெட் 3, அளவு சாப்பாடு 14, தேநீர் 2, காபி 3, பால் 3. இது சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு. நாங்கள் வசித்த பகுதி நகரத்திற்கு அப்பால் இருந்ததால் மக்கள் குறைவாகவே தென்படுவர். தட்டி விலாஸ் தான் எங்கள் பகுதியின் பிரதான மையம். உணவகத்திற்கு அனைத்து வித மக்களும் வந்து போவார்கள். நிறைய விசுவாசிகளும் உண்டு, நான் உள்பட. குறிப்பாக பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள். காலை ஏழு மணி முதலே இவர்கள் வர தொடங்கிவிடுவார்கள். சியாமளா அக்காதான் அனைவருக்கும் இலை போடுவாள், பரிமாறுவாள், கணக்கெழுதுவாள். சமைப்பது இரண்டாவது பெண் மற்றும் அம்மா. சியாமளா அக்கா சலிக்காமல் அனைவரிடமும் அன்பாக பேசி, பறவையாக பறந்து வேலை செய்வாள். சட்டை, பாவாடை அணிந்திருப்பாள். எண்ணெய் தடவி வழித்து வாரி பின்னப்பட்ட குறைவான தலைமுடி. எவ்வளவு பேர் வந்தாலும், யார் என்ன வாங்கினார்கள் என சரியாக ஞாபகம் வைத்து கணக்கும் போட்டு கச்சிதமாக வியாபாரம் செய்வாள். அவர்கள் ஏழைகளாக இருந்து, குடும்பத்தின் கூட்டு முயற்சியால் ஓரளவுக்கு முன்னேரி இருந்தார்கள். இரவு நேரங்களில் குடிகாரர்களும் வருவார்கள். சிலர் வாயிலெடுத்தும் பார்த்திருக்கிறேன். முகம் சுழிக்காமல் வேலை செய்வாள் சியாமளா அக்கா.



நானும் என் தங்கையும் அடிக்கடி அங்கு சாப்பிட செல்வோம். இருபது ரூபாயில் இருவரும் வயிறு முட்ட தின்றுவிடுவோம். முதலில் ஆவி பறக்க நான்கு இட்லி வாங்குவேன். தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி, சாம்பார் மற்றும் தக்காளி சட்னி. சியாமளா அக்கா தான் ஊற்றுவார். அதிகமும் ஆகாமல், குறையவும் அல்லாமல் சரியாக அளந்து ஊற்றுவார். அதன் சுவைக்கு ஈடு இணையே கிடையாது. கட கடவென விழுங்கி விடுவேன். எப்படித்தான் செய்வார்களோ. பின்னர் இரண்டு தோசைகள். முறுகலாக நேர்த்தியாக சுடப்படிருக்கும். சொர்க்கத்தை சுவைத்தது போல உணர்வேன். பின்னர் அம்மா, அப்பாவிற்கு பார்சல் கட்டிக்கொண்டு அடுத்தது எப்போ வரலாம் என்று யோசனை செய்து கொண்டே விடை பெறுவோம். பெரும்பாலும் சனிக்கிழமைகளில் மதியம் சாப்பாடு தட்டி விலாஸில் தான். அவர்களின் ரசத்திற்கு ஈடு இணையே கிடையாது. அப்பளம் கூட அமிர்தமாக இருக்கும்.




விடுமுறை நாட்களில், இரவு வேளைகளில் நண்பர்களுடன் தட்டி விலாஸில் ஒரு முறையும், வீட்டில் ஒரு முறையுமாக மாய பஜார் ரங்காராவ் போல வெளுத்து கட்டுவேன். எந்த நல்ல விஷயமும் ஒரு நாள் முடிவுக்கு வரவேண்டும் என்பது இயற்கையின் நியதி போலும். தட்டி விலாஸும் ஒரு நாள் மூடப்பட்டது. சியாமளா அக்கா திருமணம் செய்து கொண்டதாக சிலர் கூறினர். அவர்கள் சொந்த ஊருக்கே சென்று விட்டதாக கேள்விப் பட்டேன். மிகவும் வருந்தினேன். என் வாழ்வில் எதையோ இழந்ததை போல உணர்ந்தேன். அவர்களுக்கு பின்னர் எங்கள் பகுதியில் பல உணவகங்கள் வந்து சென்றன. ஒன்று கூட தட்டி விலாஸ் தந்த உணர்வை, சுவையை தரவில்லை.

காலம் சென்றது. நானும் வேலைக்காக பெங்களூருக்கு குடிபெயர்ந்தேன். இரண்டாவது முறையாக ஒரு கன்னட உணவகத்தில் சாப்பிட்டேன். சாம்பார் இனித்தது, இட்லி கசந்தது. சுத்தமாக பிடிக்கவில்லை. எனக்கு தட்டி விலாஸின் ஞாபகம் மீண்டும் மீண்டும் வந்தது, இன்றும் வருகிறது.

Saturday, June 12, 2010

அறியா(மை)


"என்னடா சோகமா இருக்க?" என்று கேட்டுக் கொண்டே கோல்டு பில்டர் சிகரெட்டை பற்ற வைத்தான் மணி. எட்டாம் வகுப்பிலிருந்தே புகை பிடிக்க அரம்பித்துவிட்டிருந்தான்.

அன்று என் ஆயிரம் ருபாய் விலைமதிப்புள்ள கால்குலேட்டரை தொலைத்திருந்தேன். வீட்டில் சொன்னால் மரண அடி விழும். செய்வதறியாது தவித்துக் கொண்டிருந்தேன்.

"கால்குலேட்டர் காணாம போச்சுடா."

"எப்டிடா தொலைச்ச?"

"பஸ்ல பேக்ல இருந்து எவனோ உருவிட்டான்னு நெனக்கறேன்."

"ஆமா நீ அனிதாவையே பாத்துட்டு இருந்திருப்பே. உன் சட்ட பேன்ட உருவிருந்தா கூட உனக்கு தெரிஞ்சிருக்காது."

"நானே கடுப்புல இருக்கேன். நீ வேற ஏன்டா."

"சரி விடு மச்சி. இதுக்கு போய் கவலை படற. ஈசியா கண்டுபிடிச்சரலாம். தம் வேணுமா?" என்று வழக்கம் போல் கேட்டான் மணி.

"செருப்படி வாங்கி குடுக்காம விட மாட்ட போல. தம் அடிச்சா எங்க வீட்டு நாயே கண்டுபுடிச்சுரும்." என்று நானும் வழக்கம் போல் சிகரெட்டை தவிர்த்தேன்.

"மணி அது எப்டிடா ஈசியா கால்குலேட்டர கண்டுபிடிக்கறது? பேசாம போலீஸ் கம்ப்ளைண்டு குடுத்துரலாமா?"

"இது உனக்கே ஓவரா தெரில?" என்று காரப்பார்வை பார்த்தான் மணி.

"வேற வழி இருக்கா. வீட்ல தெரிஞ்சா கொன்னே போட்ருவாங்க."

"எனக்கு தெரிஞ்ச ஒரு ஆளு மதுக்கரைல இருக்காரு. ஒரு நூறு ரூபா குடுத்தா கல்குலேட்டர் இருக்கற எடத்த புட்டு புட்டு வெச்சுருவார். "

"யாருடா அந்த மகான். ஆமா அது சரி, நான் நூறு ரூபாக்கு எங்க போவேன்?"

"இருக்கவே இருக்கான் நம்ம தரணி. அவன் கிட்ட வாங்கிக்குவோம். அப்பறமா சேத்து வெச்சு குடுத்திரலாம்." என்று மறுக்க முடியாத ஒரு யோசனையை கூறினான் மணி.

"அதுவும் சரி தான். எப்டி அந்த ஆளு கண்டுபிடிச்சு குடுப்பாரு? அவரு பெரிய மாபியாவா?"

"அதெல்லாம் உனக்கு எதுக்கு. இப்போ கிளம்பு. நம்ம மதுக்கரைக்கு போலாம். நீயே நேர்ல பாத்துக்கோ."

ஒரு மணி நேர பிரயாணத்திற்குப் பிறகு மதுக்கரை சென்றடைந்தோம். சிமென்ட் தொழிற்சாலைகள் நிரம்பி வழியும் பகுதி. நகரத்திற்கு அப்பால் இருந்தமையால் அந்த சுற்றுவட்டாரமே வெறுச்சோடி கிடந்தது. தூசு படிந்த காற்று. இதமான வெய்யில். தொய்வில்லாமல் நடக்கலானோம். ஒரு கிலோமீட்டர் நடந்த பின்னர் சில வீடுகள் தென்பட்டன. மணி ஒரு வீட்டை நோக்கி நடந்தான். நான் பின்தொடர்ந்தேன்.

ஒரு எளிமையான வீடு. முட்களால் ஆன வேலி. ஒரு சிறிய நுழைவாயில் வழியாக உள்ளே சென்றோம். வெளிப்புறத்தே பல வகை செடிகள் இருந்தன. திருஷ்டி பூசணிக்காய் மாடி மேல் இருந்து சிரித்தது. முன்கதவின் மேலே ஒரு வாஸ்து இயந்திரம் தொங்கிக்கொண்டிருந்தது. அதை பார்த்ததும் லேசாக பயம் ஒட்டிக்கொண்டது.

"நீ இங்கயே இரு. நான் உள்ள போய் பேசிட்டு வரேன்." என்று தனியே விட்டு விட்டு போனான் மணி.

சிறிது நேரம் கழித்து மணி உள்ளிருந்து அழைத்தான். யார் இந்த ஆள்?. எப்படி என் பொருளை கண்டுபிடிப்பான் என்று வழி நெடுக நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். மணியையும் பல முறை கேட்டு விட்டேன். அவன் பதில் கூற மறுத்து விட்டான்.

உள்ளே சென்றேன். அறைகள் முழுவதுமாய் சாமி படங்கள். ஒரே புகை மூட்டமாய் இருந்தது. ஒரு பாய் விரித்திருந்தது.

"உக்காருங்க. ஐயா இப்போ வந்திருவாரு" என்று ஒரு நடுத்தர வயது ஆசாமி திடிரென்று தோன்றி கூறினான்.

நாங்கள் அமர்ந்தோம். தண்ணீர் குடுத்தான் அந்த ஆசாமி. நடந்த களைப்பில் நிறையாவே குடித்தேன்.
குடித்த பின்பு தான் கவனித்தேன். தண்ணீர் மஞ்சள் நிறத்தில் இருந்தது. லேசாக உப்புக் கரித்தது.

"என்னதுங்க இது?" என்றேன்.

"கோமியம். ஒடம்புக்கு ரொம்ப நல்லது." என்று இளித்தான் அந்த எடுபிடி. எனக்கு குமட்டிக்கொண்டு வந்தது. பாக்கெட்டில் இருந்த இரண்டு தேன் மிட்டாய்களை வாயில் போட்டுக்கொண்டு சமாளித்தேன்.

"இப்போவாவது சொல்லுடா. இந்த ஆளு பெரிய திருடனா? நிறைய கனெக்சன் வெச்சிருக்கானா? அப்டி இருந்தாலும் ஒரு கல்குலேட்டர கண்டுபிடிக்கறது ரொம்ப சிரமம் ஆச்சே?"

"பேசாம இருடா. சாமி வந்துட்டாரு"

"என்னது சாமியா. என்ன சொல்ற. எங்க இருக்காரு?"

"அங்க பாரு வர்றாரு."

தமிழ் சினிமா கதாநாயகி போல புகை சூழ பின் வாசல் வழியாக மூன்றடி உயரத்தில் ஒரு அரைக்கிழவன் வந்தான். அவனை பார்த்ததும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. வாயை பொத்தி சிரமப்பட்டு சிரிப்பை அடைத்தேன்.

"ஏன் சிரிக்கற. அவரு எவளோ பெரிய ஆளு தெரியுமா. உன் கால்குலேட்டர் எங்க இருக்குனு அவரு சொல்லலேன்னா என் பேர மாத்திக்கரேண்டா." என்று மணி என் காதுக்குள் கிசுகிசுத்தான்.

"என்ன தம்பி என்ன பிரச்சன?" என்றார் சாமி.

இம்முறை வாய்விட்டு பலமாக சிரித்தேன். பின்னே பெண் குரலில் பேசினால் யாருக்கு தான் சிரிப்பு வராது. மணி என்னை முறைக்க சிரிப்பை அடக்கிக் கொள்ள முயற்சித்து இரண்டு முறை இடைவெளி விட்டு சிரித்து முடித்தேன். சாமி இதையெல்லாம் பொருட்படுத்தவே இல்லை.

"சாமி இவனோட கால்குலேட்டர காணோம். நீங்க தான் எப்டியாவது கண்டுபிடிச்சுக் குடுக்கணும்."
என்றான் மணி.

"காணிக்கை கொண்டு வந்திருக்கீங்களா?"

ஆம் என்று தலை ஆட்டினோம்.

"இந்த தட்ல போடுங்க." என்றார் சாமி. முழுதாக நூறு ரூபாயை போட்டோம்.

"கால்குலேட்டர் தானே இப்பவே எங்க இருக்குனு பாத்துடலாம்." என்று கூறிக்கொண்டே ஒரு வெற்றிலையை எடுத்தார் சாமி. கூடவே நின்று கொண்டிருந்த எடுபிடி மை டப்பாவை நீட்டினான்.

வெற்றிலையில் மையை தடவி வாயில் ஏதோ முணுமுணுத்தார் சாமி. எனக்கு நூறு ருபாய் அம்பேல் என்று உறுதியாக தெரிந்துவிட்டது.

"சாமி எதாவது தெரியுதுங்களா." என்றான் மணி ஆவலுடன்.

"ஒரு நிமிஷம்." என மீண்டும் முணுமுணுத்தார் சாமி. ஏதோ ஜக்கம்மா மந்திரம் போல கேட்டது.

"இப்போ பொருள் சேலத்துல இருக்கு. சரியா சொல்லனும்னா சேலத்த தாண்டி தர்மபுரி நோக்கி போய்ட்டு இருக்கு."

"என்னடா இந்த ஆளு பஸ் ரூட்டெல்லாம் சொல்றான்." என்றேன்.

"சும்மா இருடா. என்னதான்னு கேப்போமே. சாமி கொஞ்சம் தெளிவா சொல்லுங்க."

"நீங்க தேடற பொருள் தர்மபுரிய நோக்கி போய்ட்டு இருக்கு. திருடன் பஸ்ல போய்ட்டு இருக்கான்னு நெனக்கறேன். இதுக்கு மேல தொறத்தி பிடிக்கறது ரொம்ப கஷ்டம். உள்ளூர்ல இருந்தா சுலபமா மடக்கி புடிச்சிருக்கலாம். உங்க கெட்ட நேரம். கெடைக்கறது ரொம்ப கஷ்டம்." என்று புன்னகையுடன் கூறினார் சாமி.

"இந்த ஆளுக்கு நல்ல நேரம். நல்ல ஆளுகிட்ட கூட்டிட்டு வந்தடா. இத முன்னாடியே சொல்லிருந்தா வந்தே இருக்க மாட்டேன். இப்போ இன்னொரு நூறு ரூபாயும் போச்சு." என்று மணியை திட்டினேன்.

"ஜிபிஎஸ் (GPS) எல்லாம் இந்த ஆளு முன்னாடி ஒண்ணுமே இல்ல. வெத்தலைலையே மேப்பு போடறான். ஏன்டா நீ இவன பத்தி முன்னாடியே சொல்லல? " என்று நான் கடுகடுத்தேன்.

"பரம ரகசியம்னு சாமி சொன்னாரு. மின்னாடியே வெத்தல மேட்டர சொன்னா மந்திரம் பலிக்காதுன்னு போன தடவ வந்த போது சொன்னாரு. " என்றான் மணி.

"அடப்பாவி நீ அடிக்கடி வந்து போற எடமா இது. படிச்சவன் தானடா நீ."
மணி வெட்கித் தலை குனிந்தான்.

"தம்பிங்களா மணி ஆறாகப் போகுது. நான் ஜகன் மோகினி யாகம் செய்யணும். கொஞ்சம் சீக்கரம் எடத்த காலி பண்ணுங்க." என்றான் அந்த பித்தலாட்டக்காரன்
.
சிரித்துக்கொண்டே "ரொம்ப நன்றிங்க. அப்போ நாங்க கிளம்போரங்க." என்று கூறி ஒரு வழியாக இடத்தை காலி செய்தோம்.

மணியை அன்று திட்டியது போல் நான் இது வரை யாரையும் திட்டியது இல்லை. கால்குலேட்டர் தொலைந்ததை வீட்டில் இன்று வரை சொல்லவில்லை. சம்பவம் நடந்து ஒரு வாரம் கழித்து மணி தொலைபேசியில் அழைத்தான்.

"டேய் மச்சான் என் ஆள நாலு நாளா காணோம். வீடு கூட பூட்டிருக்கு. எனக்கு என்ன பண்றதுன்னு தெரில."

"நீ அங்கேயே இரு. நான் உடனே வரேன். மதுக்கரைக்கு போலாம்." என்று நான் கூறியதும் மணி இணைப்பை துண்டித்து விட்டான். உள்ளுக்குள் மிதமாக நகைத்துக்கொண்டேன்.

Sunday, June 06, 2010

பூக்காரப் பாட்டி

எனக்கு நினைவு தெரிந்த காலம் முதல் அந்த மூதாட்டியை அறிவேன். காலை ஏழு மணிக்கெல்லாம் எங்கள் தெருவிற்கு வந்து விடுவாள். ஒவ்வொரு வீடாக பூ வேண்டுமா என்று கேட்பாள். இடுப்பில் மரத்தால் பின்னிய ஒரு கூடை. பக்கத்தில் இருந்து கவனித்தால் அந்த கூடை அவளை பாதி மறைத்திருப்பது தெரியும். உள்ளே அனைத்து வண்ணங்களிலும் பூக்கள் இருக்கும். அரளிப்பூ, துளசி மாலை, மல்லிகை, முல்லை மற்றும் சங்குப்பூ என் பல வகைகள் கூடையில் சங்கமிக்கும். கூடையின் விளிம்பில் கையிற்றால் கட்டிய ஒரு அக்ஸா ப்ளேடு. காலில் செருப்பு கிடையாது. ஒரு வெள்ளை சீலை மட்டும் அணிந்திருப்பாள். வயது அறுபதை கடந்திருக்கும் என்பது என் யூகம்.



என் பாட்டி தினமும் அவளிடம் பூ வாங்கி சாமி படங்களுக்கும், வீட்டின் பிரதான அறையில் தொங்கிக் கொண்டிருக்கும் என் கொள்ளுத் தாத்தாவின் படத்திற்கும் சாத்துவாள். கொள்ளுத் தாத்தா திப்பு சுல்தான் அரண்மனையிலே பணியாற்றியவர் என்று பூ சாத்தும் ஒவ்வொரு முறையும் கூறுவாள் பாட்டி. பூக்காரப் பாட்டிக்கு நாங்கள் எவ்வளவு முழம் பூ வாங்குவோம் என்பது மனப்பாடம். கட கட வென கையில் முழம் போட்டு அக்ஸா ப்ளேடால் படக் என்று வெட்டித் தருவாள். கூட கொஞ்சம் கொசுரும் தருவாள். இந்த கொசுரு தரும் பழக்கம் ஒரு மிகப் பெரிய வியாபார உத்தி. வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் மற்றும் விசுவாசிகளாக மாற்றி விடும். என் பாட்டியும் விதிவிலக்கல்ல. இரண்டு மூதாட்டிகளும் சிறிது நேரம் உரையாடிக் கொள்வார்கள். என்ன தான் பேசுவார்களோ தெரியவில்லை. ஓரிரு சமயம் ஒட்டுக்கேட்டிருக்கிறேன். பூக்காரப் பாட்டி தன் மகனைப் பற்றி எதாவது கூறிக்கொண்டிருப்பாள். என் பாட்டி ஆறுதல் படுத்துவாள்.

ஒரு நாள் சாயங்காலம் காந்திபுரம் லாலா கடைக்கு அம்மாவுடன் சென்றிருந்தேன். ஒரு கிழக் குரல் எங்களை அழைத்தது. பூக்காரப் பாட்டி அங்கே தன் பேத்தியுடன் வியாபாரம் செய்து கொண்டிருந்தாள். அப்பொழுது எனக்கு ஒரு பதினைந்து பதினாறு வயதிருக்கும். அவள் பேத்திக்கும் என் வயது தான் இருக்கும் என்று உருவத்தை பார்த்து எடை போட்டுக் கொண்டேன். பேத்தி காலையில் பள்ளிக்கூடம் போவதாகவும் மாலையில் தனக்கு உதவுவதாகவும் பாட்டி கூறினாள். அவர்கள் மீது ஒரு வித பரிதாபம் ஏற்பட்டது. பிளாட்பாரத்தில் பாட்டியின் அந்த மரக்கூடை இருந்தது. கூடவே அதன் சகோதரிகளைப் போல் வேறு இரண்டு கூடைகள் இருந்தன. பழுப்பு நிறமாக மாறி இருந்த ஒரு வெள்ளைத் துண்டு தான் அவர்கள் இடம். அதன் மீது தான் நாள் முழுக்க அமர்ந்து வியாபாரம். ஈயத்தால் ஆன ஒரு தூக்கு போசி காலியாக கமுத்தி வைக்கப்பட்டிருந்தது. அருகே அழுக்கு படிந்த தண்ணி பாட்டில். பாட்டி காலையில் எங்கள் நகரில் வியாபாரத்தை முடித்து விட்டு காந்திபுரம் வந்து நாள் முழுக்க பிளாட்பாரத்தில் அமர்ந்து பூ விற்பாள் என்று அம்மா சொன்னாள். அவர்கள் லாலா கடையில் இது வரை எதாவது வாங்கியிருப்பார்களா என்றொரு கேள்வி எழுந்தது.



இந்த காட்சி அன்று என்னை பெரிதாக பாதிக்கவில்லை. அன்று நான் வெளி உலகம் அறிந்திருக்கவில்லை. நான் கல்லூரிப் படிப்பு முடித்து வேலைக்கு கோவையை விட்டு செல்லும் வரையிலும் பாட்டி பூ விற்றுக்கொண்டிருந்தாள். கடந்த சில வருடங்களாக விடுமுறைக்கு கோவை வந்த பொழுது பாட்டியை காணக் கிட்டவில்லை. வெளி உலகம் ஓரளவு பரிச்சயமான பிறகு என் மனதில் அந்த மூதாட்டியைப் பற்றி பல எண்ணங்கள் தோன்றுகின்றன. பாட்டிக்கு பூக்கள் எங்கிருந்து கிடைக்கின்றன? அவளது ஒரு நாள் சராசரி வருமானம் எவ்வளவு இருக்கும்? அவள் வீடு குடிசையா அல்லது பிளாட்பாரம் தானா? உடல் கழிவுகளை எவ்வாறு நீக்குவாள்? உழைக்க உடம்பு நெளியாத நான் அந்த மூதாட்டியின் முன் எம்மாத்திரம்? தன் மக்கள், பேத்திகளுக்கு எம்மாதிரியான இடங்களில் திருமணம் செய்து வைப்பாள்? கணவன் (கிழவன்) உயிருடன் தான் இருக்கிறானா? இவ்வளவு சுலபமாக வித விதமாய் எப்படி பூ
கட்டுகிறாள்? நான் பூ கட்ட பல முறை முயன்று தோற்றுப் போயிருக்கிறேன். மின்னல் வேகத்தில் சரியான விகிதத்தில் பூக்கள் பொறுக்கி முடிச்சு போடுவதற்கு பின்னால் எத்தனை நியுரான்களின் பாய்ச்சல். அது ஒரு கலை என்பது என் அபிப்ராயம்.

அந்த மூதாட்டியின் உலகம் தான் எவ்வளவு சுருங்கியது. பிளாட்பாரம், சாலைகள், பூக்கள், நூல், நாளை சூரியன் உதிக்கும் என்கிற ஒரு நம்பிக்கை. மனமென்னும் அட்சயபாத்திரம் அள்ளித் தரும் உற்சாகம் மட்டுமே மூலதனம். சுருக்குப் பையில் சில சில்லறைகள் மற்றும் வெற்றிலை. அவளின் வாழ்கை முறையை நினைத்தால் இன்றும் வியப்புகுள்ளாகிறேன். இயற்கையை அவ்வளவாக தீண்டாத எளிய வாழ்க்கை. உழைத்து நிம்மதியாக உறங்கும் ஜீவன். என்னுள் எழுந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க அந்தக் கிழவி இன்று உயிருடன் இருக்கிறாளா என்று தெரியவில்லை.

எனக்கு மாலை சாத்தும் பழக்கம் கிடையாது. கடவுள் நம்பிக்கை இல்லாதது ஒரு காரணம். ஆனாலும் யாரேனும் பூ விற்றால் ஒரு முழமாவது வாங்கிவிடுவேன். அது நான் அவர்கள் உழைப்புக்கு செலுத்தும் மரியாதை. பாட்டிக்கு செலுத்தும் மரியாதை. பூ கட்டும் கலைக்கு செலுத்தும் மரியாதை.