பேருந்தின் இஞ்சின் (Engine) சத்தம் ஒரு பொருட்டாகவே தெரிவதில்லை. ஆனால் லேசாக குறட்டை சத்தம் கேட்டால் அப்படி ஒரு உறுத்தல்.
நான் அதிகம் பயணம் செய்தது 13 ஆம் இருக்கையில் அமர்ந்து தான். பேருந்தின் நடுவில் அமைந்திருப்பதால் அதை விட பாதுகாப்பான இருக்கை வேறு எதுவும் இல்லை.
இளைய ஓட்டுனராக இருந்தால் அனுபவம் குறைவு என்று கவலை. கொஞ்சம் வயதானவராக இருந்தால் உடல் நலம் குறைவாக இருக்குமோ என்று கவலை.
பேருந்து மெதுவாக சென்றால் பொறுமை இழப்பேன். வேகமாக சென்றால் பயம் உணர்வேன். இதை தான் ஆங்கிலத்தில் ambivalence என்று சொல்வார்களோ!.
இரவு 2 மணிக்கு நொறுக்கு தீனி தின்றுவிட்டு அந்த பிளாஸ்டிக் பையை அப்படியே பேருந்தில் இருந்து சாலையில் வீசி எரியும் கூட்டம் ஒன்று எப்போதும் உண்டு. என்ன ஜென்மங்களோ!
கைபேசியில் இரவு முழுவதும் பேசி பேசி உலகத்தையே திருப்பி போடும் இளமை பட்டாளத்தின் அட்டகாசத்தை சொல்லி மாளாது.
எப்பொழுதுமே சம்பள உயர்வு, வேலை தொழில்நுட்பம், கல்யாணம், வெளிநாட்டு பயணம் (onsite) பற்றி பேசிக்கொண்டிருக்கும் உருப்படாத சில கணிப்பொறி கூலிகள். தான் தான் மேதாவி என்றும், மற்ற அனைவரும் முட்டாள்கள் என்றும் ஒரு எண்ணம் இவர்களுக்கு. சாப்ட்வேர் (சாவு) கிராக்கிகள்!
ஓட்டுனர் திடீர் என பிரேக் பிடித்தால், சைக்கிள் கூட ஓட்டத் தெரியாத பயணி பின்னால் இருந்து திட்டுவான். இவன் ஓட்டினால் தெரியும் கஷ்டம். ஓட்டுனரும் மனிதன் தானே.
வண்டி புறப்படும் வரை கீழே சிகரெட் பிடிக்கும் ஆசாமிகள், வண்டி புறப்படும் தருணத்தில் கடைக்குச் சென்று புத்தகம், தண்ணி பாட்டில் வாங்கும் cool guys என்று கடுப்பு அடிக்கும் அரவேக்காடுகள் என்றும் உண்டு.
கழிப்பறை வசதி கொண்ட இடத்தில் பேருந்து நிறுத்த பட்டாலும், வெட்ட வெளியில் தான் சிறுநீர் கழிப்பேன் என்று கங்கணம் கட்டி கொண்டு சுதந்திரமாக அசுத்த படுத்துபவர்கள் பலர்.
சில நடத்துனர்கள் ஓட்டுனர்களிடம் பேசிக்கொண்டே வருவார்கள். ஓட்டுனர் விழித்து கொண்டு தான் பதில் சொல்ல வேண்டும். அதில் எனக்கு ஒரு மன அமைதி. நிம்மதியாக உறங்கிவிடுவேன். சில நடத்துனர்கள் ஓட்டுனர்களிடம் சண்டை போட்டுக் கொண்டு மௌனமாக இருப்பார்கள். இது ஓட்டுனரின் கவனத்தை குறைக்கும். இந்த சமயங்களில் ஓட்டுனரின் மன நிலையை ஆராய்ந்து ஆராய்ந்து நான் மன உளைச்சலுக்கு ஆளாவேன்.
அழகான பெண் ஒருத்தி கடைசி இருக்கையில் அமர்ந்து இருந்தாலும், பேருந்தின் உள்ளே நுழையும் அத்தனை ஆண்களின் பார்வையும் முதலில் அங்கே தான் இருக்கும். இது உலக நியதி (universal truth) போலும்.