என்னடா நான் வளத்த கிளிய பத்தி பேச போறன்னு நெனக்கறீங்கள? நெனசுக்கொங்க நெனசுக்கொங்க. நான் கிளியே வளக்கலியே..
நான் சொல்ல வர்றது எங்க மாமாவோட பஜாஜ் சேடக் ஸ்கூட்டரப் பத்தி. எனக்கு ஒரு பதினேழு வயசு இருக்கும். அப்போ தாத்தாவோட டிவிஎஸ் பிப்டி மட்டும் தான் ஓட்டிக்கிட்டு இருந்தேன். அதுவும் நேரா மட்டும் தான் போக தெரியும். இடப்பக்கம் வலப்பக்கம் கூட திருப்ப தெரியாது. வண்டிய திருப்பனும்னா நிறுத்தி எறங்கி திருப்பி மறுபடியும் ஒதைச்சு கெளப்பிக்கிட்டு போவேன். வண்டிய ஒதைக்கும் போது சில சமயம் சைலன்சர்ல சூடு கூட பட்டிருக்கு. அது அப்டியே தடிப்பா புஸ்ஸுன்னு ஆய்டும். ஆன நேரா வேகமா போகும் போது ஏதோ ஒரு போதையா இருக்கும். அதுவும் தாத்தாவுக்கு தெரியாம எடுத்து ஓட்டினா இன்னும் அப்டியே தலைக்கு ஏறிடும்.
எனக்கு பதினெட்டு வயசு நெருங்கும் போது அப்பா மாமா கிட்ட கியர் வண்டி கத்துக்க சொன்னாரு. நானும் ஆழந் தெரியாத கிறுக்குத் தனத்துல மாமா வீட்டுக்கு போனன். அப்போ தான் ரொம்ப நாள் கழிச்சு திரும்ப பச்ச கிளிய பாத்தேன். அது எவளோ பெரிய கில்லாடி தெரியுமா.. ஒரு தடவ அது காணாம பறந்து போய்டுச்சு.. எங்க மாமா அதுனால சந்தோச பட்டாரா இல்ல வருத்த பட்டாரானு இன்ன வரைக்கும் தெரில.. ஆனா எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.. அந்த கலர்ல திரும்ப இன்னொரு வண்டிய நான் எப்போ பாப்பேன் .. நீங்களே சொல்லுங்க.. ஆனா ரெண்டு நாள்ல யாரோ வீட்டுக்கே வந்து உங்க வண்டி ஒரு பொதருக்குள்ள கெடக்குதுனு சொன்னங்க.. மாமாவும் வேற வழி இல்லாம திரும்ப எடுத்துட்டு வந்துட்டாரு.. அப்பறம் கொஞ்ச வருசத்துல வேற ஒரு பெரிய வெஸ்பா ஸ்கூட்டர் வாங்கிட்டாரு மாமா.. அது நாள்ல இருந்து கிளிய கூண்டுல அடைச்சுட்டாரு..அப்பறோம் தான் எனக்கு சொல்லிக்குடுக்க ஒரு நாள் கிளிய வெளிய எடுத்தாரு.. பச்ச கிளிக்கு வயசே ஆகல ஆகாது..
மாமா அதுல எப்டி கியர் போடறதுன்னு சொல்லி கொடுத்தாரு.. அப்பறம் தெனமும் ஒரு மணி நேரம் அதுல சவாரி செஞ்சு ஒரு அளவு பழகிட்டேன்.. மாமாவும் அத கொஞ்ச நாள் என்னையே வெச்சுக்க சொன்னாரு.. அன்னில இருந்து எனக்கு தூங்கற நேரம் தவற மத்த எல்லா நேரமும் அதோட தான்.. கொஞ்சம் கொஞ்சமா வண்டிய மெயின் ரோட்ல ஓட்ட ஆரம்பிச்சேன்.. அடிக்கடி கொஞ்ச தூரம் போக போக கிளி சோர்ந்து போய் தூங்கிடும்.. அப்பறம் அது கிட்ட கெஞ்சி படுக்க வெச்சு மிதிச்சா எழுந்திரிச்சுக்கும்.. கொஞ்ச நம்பிக்கை வந்தவுடனே மத்தவங்களுக்கு லிப்ட் கூட குடுக்க ஆரம்பிச்சேன்னா பாத்துக்கோங்க.. மொத மொதலா ஒருத்தன ஏத்திகிட்டு எறக்கி விட்ற வரைக்கும் தைரியமா நடிச்சது மறக்க முடியுமா சொல்லுங்க..
அப்போ நான் மொத தடவ கிட்டார் கத்துக்க முயற்சி பண்ண காலம்.. பின்னாடி கிட்டார மாட்டிக்கிட்டு பச்ச கிளில ஒரு ரௌண்டு வந்தேன்ன எல்லா பொண்ணுங்களும் நம்மளையே பாப்பாங்கன்னு நெனச்சுட்டு இருந்தேன்.. அப்பறமா சில வருஷம் கழிச்சு அம்மா நான் வலம் வரும் காட்சிய வர்ணிச்சு சிரிச்சாங்க.. ஊரே கை கொட்டி சிரிச்சிருக்கும்.. இதுல என்னன்னா பச்ச கிளிக்கு இன்சூரன்ஸ் இல்ல, வரி கட்டல.. ஆனா அத பத்தியெல்லாம் எனக்கு கவலையே இல்லாம கிளிய பறக்க விட்டேன்..
ஒரு தடவ தங்கச்சிய பரிச்சைக்கு கொண்டு போய் விட போய்ட்டு இருந்தங்க.. திடிர்னு நம்ம தண்ணீர் பந்தல் வளைவுக்கு முன்னாடி தாகம் எடுததான்னு தெரில கிளி நின்னுடுச்சு.. பரிச்சைக்கு நேரம் வேற ஆகிட்டே இருக்கு.. என்ன என்னமோ பண்ணி பாத்தேங்க.. ஊஹும்.. அப்பறம் அந்த நேரம் பாத்து ஒரு அம்மா அதிர்ஷ்டவசமா டீ வீ எஸ் எக்செல் சூப்பர்ல வந்தாங்க.. அவங்க உதவி பண்ணி தங்கச்சிய பரிட்சைக்கு சரியான நேரத்துல கொண்டு போய் விட்டாங்க.. அதுக்கு அப்பறம் தங்கச்சி பஸ்லயே தான் பள்ளிக்கூடத்துக்கு போனா..
உலகம் போன போக்குல நானும் இப்போ வெளிநாட்டுல வந்து எல்லாத்தையுமே மறந்துட்டு வெக்கமே இல்லாம ஆடம்பரமா இருக்கறேங்க.. இப்போ எந்த கார் வேணாலும் வாடகைக்கு எடுத்து ஓட்டலாம், ஓட்டிருக்கேன்.. இருந்தாலும் பச்ச கிளி தாங்க மனசுல நிக்குது.. ரொம்ப நாள் களிச்சு மாமா கிட்ட பேசினேன்.. அப்போ வண்டிய ஒருத்தர்க்கு சும்மா குடுதுட்டேன்னு சொன்னாரு.. பின்ன யாருங்க காசு குடுத்து வாங்குவா?.. நான் வாங்குவேங்க..
