Thursday, August 12, 2010

நூற்றுக்கு பூஜ்யம்...



கிட்டாரிலே சாத்தான்கள்
மனதிலே கரையான்கள்
விரல்களிலே தயக்கம்..
முன்னேற்றம், அது பின்னோக்கி..

ராகம் தெரியாமலே பாடல் எழுதுகிறேன்..
பாடலின் அமைப்பும் அறியாமலே..
பாதை இல்லா திசையிலே பயணிக்கிறேன் ..
ஒரு வைரமேனும் கிட்டுமோ?...
இல்லை வழிப்பறி தான் மிஞ்சுமோ?

கரையிலேயே தத்தளித்தால்..
ஆழ் கடல் செல்வதெப்போது?
வேட்டை ஆடாமல் பிழைக்க முடியுமா
இந்த அமேசான் காட்டிற்குள்ளே...

விண்வெளி செல்ல விடுமுறை வேண்டுமே..
யாரிடம் விண்ணப்பிப்பது?
நடனம் தான் ஆடுகிறேன்..
ஒரு அணுவும் வியக்கவில்லையே?

கிட்டாரிலே சாத்தான்கள்
மனதிலே கரையான்கள்
விரல்களிலே தயக்கம்..
முன்னேற்றம், அது பின்னோக்கி..

Sunday, July 04, 2010

மூளை..

டபக் டபக் டபக்.. மூன்று குவோட்டர்களை அந்த கோக் இயந்திரத்தில் போட்டான். சதுர வடிவ பொத்தானை அழுத்த, ஒரு ஜீரோ காலரி கோக் ஓட்டை வழியாக குதித்தது.

(வலது மூளை..)

"நேற்று எவ்வளவு அவமானப் படுத்தினான் அந்த வெள்ளைக்கார ஆசிரியன். அவனை சும்மா விடலாமா. மாறி மாறி இளித்தார்களே கூடவே இருந்த மற்ற நாய்கள். நீ என்ன செய்யவேண்டும் என்பதை நான் காட்டுகிறேன் பார்."

கோக்கை உடைத்தான். நுரை தள்ளியது. இரண்டு மடக்குகள் உள்ளே இறங்க கேபினின் (Caffeine) தாக்கத்தை மறு கணமே உணர்ந்தான். ஒரு மாடி ஏறிச் சென்று அந்த ஆலோசனை கூட்டத்தை அடைந்தான். அனைவரும் வந்திருந்தார்கள் ஆசிரியனைத் தவிர. ஐந்து நிமிடங்கள் கழித்து பரபரப்பாக உள்ளே நுழைந்தான் ஆசிரியன். கலந்துரையாடல் தொடங்கிற்று. அவன் மட்டும் மௌனம் காத்தான். பத்து நிமிடங்களுக்குப் பின், .44 மேக்னம் கோல்ட் அனகோண்டா (.44 Magnum Colt Anaconda) துப்பாக்கியை பையில் இருந்து எடுத்து ஆறு ரௌண்டுகள் சுட்டான். மீதமுள்ள கோக்கை பருகிக் கொண்டே சடலங்களை எண்ணத் தொடங்கினான்.





(இடது மூளை..)

"வலது மூளை சொல்வதை கேட்காதே. உன் எதிர்காலமே இந்த ஆய்வை நம்பித் தான் இருக்கிறது. இன்று கூட்டத்தில் பொறுமையாக பதில் அளி. இன்னும் ஒரு மாதத்திற்குள் இந்த ஆய்வை அரும்பாடு பட்டாவது முடித்துவிடலாம். கவலைப்படதே."

ஒரு மாடி ஏறிச் சென்று ஆலோசனை கூட்டத்தில் அமர்ந்தான். ஐந்து நிமிடங்கள் கழித்து ஆசிரியன் வந்தான். கலந்தாய்வு தொடங்கிற்று. மௌனம் காத்தான். பத்து நிமிடம் கழித்து பையில் இருந்து புத்தகத்தை எடுத்து குறிப்புகள் எடுக்கத் தொடங்கினான்.

Tuesday, June 15, 2010

ஈவ்..



விடுமுறைக்கு அக்கா வீட்டிற்க்கு சென்றிருந்தாள் மாலதி. அக்கா பிரபா, சென்னையில் கணவருடன் சமீபத்தில் குடி பெயர்ந்திருந்தாள். அத்தான் பத்திரிகையாளர்.

"என்னடி ஒரு மாதிரியா இருக்கே?"

"அது ஒன்னும் இல்லக்கா. ரெண்டு நாள் முன்னாடி ஒரு போன் கால். எவனோ ஒருத்தன் என் பேரெல்லாம் கரெக்டா சொன்னான். அசிங்க அசிங்கமா பேசினான். நான் உடனே வெச்சுட்டேன். திரும்ப ரெண்டு மூணு தடவ கால் பண்ணான். அப்பறம் நான் அந்த நம்பர பிளாக் பண்ணிட்டேன். யாரா இருக்கும்னு தெரில." என்றாள் மாலதி.

"நம்பர பிளாக் பண்ணிடல்ல. இனி தொந்தரவு இருக்காது. இன்னொரு தடவ அந்த மாதிரி நடந்தா உடனே சொல்லு புகார் குடுத்துரலாம். புறப்படு. இன்னக்கி பாண்டிச்சேரி போறோம். மறந்து போச்சா."

"இதோ அஞ்சு நிமிஷம். ரெடி அய்டறேன்."

காலையே பாண்டிச்சேரி சென்று ஊர் சுற்றினார்கள். அத்தான் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களையெல்லாம் பட்டியல் இட்டு திட்டம் வகுத்திருந்ததால் பயணம் மாலதிக்கு இனிமையாக இருந்தது.

சென்னைக்கு திரும்புகையில் அத்தான் உறங்கி விட்டார். மாலதி அக்காவுடன் பேசிக்கொண்டே கார் ஓட்டினாள். தூக்கத்தில் அத்தான் அவ்வப்பொழுது பல்லைக் கடித்துக் கொண்டிருந்தார். இதைக் கண்ட மாலதிக்கு அதிர்ச்சியாக இருந்தது. அத்தான் அவ்வப்பொழுது ப்ரக்ஸிசம் (Bruxism) ஆல் அவதிப்படுவதாகவும், அதற்கு சிகிச்சை மேற்கொள்வதாகவும் அக்கா கூறினாள்.

அடுத்த நாள் கோவையில் அவசர வேலை இருப்பதாக கூறி அக்காவிடம் விடைபெற்று சென்றுவிட்டாள் மாலதி.

இரவு பிரபா தொலைபேசியில் அழைத்திருந்தாள். நலம் விசாரித்தாள். "உன் அத்தானோட கட்டுரை இன்னக்கி பத்திரிக்கைல வந்திருக்கு பாரு." என்று கூறி இணைப்பை துண்டித்தாள். மாலதி வாசிக்க மனமில்லாமல் பத்திரிக்கையை புரட்டினாள். "ஈவ் டீசிங்" பற்றி அத்தான் அருமையாக எழுதியிருந்தார். தன்னிடம் இரண்டு நாட்களுக்கு முன் தொலைபேசியில் உரையாடியவன் அவ்வப்பொழுது பல்லை கடித்துக் கொண்டதை மாலதியால் மறக்க முடியவில்லை.

Monday, June 14, 2010

தட்டி விலாஸ்

தட்டி விலாஸில் எப்பொழுது சாப்பிட ஆரம்பித்தேன் என்று நினைவில்லை. உலகத்திலேயே என் அம்மா சமையலுக்கு பிறகு நான் விரும்பி சாப்பிட்டது தட்டி விலாஸில் தான். அதை நடத்திக் கொண்டிருந்தது கன்னடம் பேசும் ஒரு கூட்டு குடும்பம். அவர்கள் உணவகத்திற்கு பெயர் சூட்டவில்லை. 'தட்டி விலாஸ்' என்பது நாங்கள் சூட்டிய பெயர். அறுபதில் இருந்து எழுபது வயதிற்குள் இருக்கும் தம்பதியர், அவர்களின் மூன்று பெண்பிள்ளைகள் மற்றும் ஒரு ஆண்பிள்ளை என கூட்டமான குடும்பம் அது. இரண்டு பெண்களுக்கு திருமணம் ஆகி பிள்ளைகளும் இருந்தனர். மூத்த பெண் திருமணம் ஆன பின்பு மாப்பிள்ளை வீட்டில் குடிபெயர்ந்து விட்டாள். இரண்டாவது பெண் தன் கணவருடன் தட்டி விலாஸில் தான் வசித்து வந்தாள். இளைய மகன் எங்கோ வேலை செய்து கொண்டிருந்தான். இவர்கள் அனைவரையும் விட மிக முக்கியமானவர் மூன்றாவது பெண்ணாகிய சியாமளா அக்கா. இவர்களுடன் ஒரு பூனை, நான்கைந்து ஆடுகள் மற்றும் கோழிகளும் வசித்து வந்தன.





அவர்களை பற்றி மேலும் காணும் முன் தட்டி விலாசை சற்று காண்போம். தென்னங்கீற்றால் கான்க்ரீட் சுவரின் மீது எழுப்பப்பட்ட கூரை. தரை முழுவதும் மாட்டு சாணத்தால் மெழுகப்பட்டிருக்கும். ஆங்காங்கே தரையில் மர மேசைகளும், இருக்கைகளும் பதிக்கப் பட்டிருக்கும். முன் சுவற்றில் சதுர வடிவில் ஒரு நுழைவாயில். கதவு கிடையாது. இரவு உறங்கும்முன் வாயிலை துணியால் மூடிக்கொள்வார்கள். உள்ளே நுழைந்தவுடன் வலப்பக்கம் தேநீர், காபி போட வசதியாக மேசை, அதன் மீது ஒரு குமுட்டி அடுப்பு, கண்ணாடி டம்ளர்கள், வடிகட்டி மற்றும் பாத்திரம் கழுவ தோதான மூலை. மூத்தவர் அப்பாதான் அதன் பொறுப்பாளர். சற்று முன் நகர்ந்தால் கண்ணாடி மற்றும் அடுக்குகள் பொருத்தப்பட்ட மேசை. அதன் மீது அடுக்கடுக்காக வாழை இலைகள், பார்சல் கட்ட தேவை படும் காகிதங்கள், பாலிதீன் பைகள் மற்றும் நூல்கண்டு. பார்சல் காகிதங்கள் பெரும்பாலும் தினதந்தியாக இருக்கும். அவர்கள் தினத்தந்தியை தினமும் வாசிக்கவும், பார்சல் கட்டவும் உபயோகிப்பார்கள். கூடவே கல்லாப்பொட்டியும் இருக்கும். இதன் பொறுப்பாளர் சியாமளா அக்கா தான். வேறு யாரும் நெருங்க மாட்டார்கள். அதை தொடர்ந்து சாப்பிட உட்கார மேசைகள் மற்றும் நாற்காலிகள். மேலும் முன் சென்றால் நுழைவாயிலுடன் ஒரு தடுப்புச் சுவர். அதன் ஊடே இரண்டு சிறிய அறைகள். முதல் அறையில் சமையல் வேலை நடக்கும். சமைக்க பெரும்பாலும் விறகுகளையே பயன்படுத்துவார்கள். இரண்டாம் அறையில் தான் அனைவரும் உறங்குவார்கள். ஒரு தொலைகாட்சிப் பெட்டியும் அங்கு துணைக்கு இருந்தது.

எந்த இடத்தில் உட்கார்ந்து பார்த்தாலும் தெரிகிற மாதிரி, உணவு அட்டை நுழைவாயிலிற்கு அருகே தோதான இடத்தில் மாட்டப்பட்டிருக்கும். இட்லி 1.50, தோசை 4, வெங்காய ஊத்தாப்பம் 5.50, ஆம்லெட் 3, அளவு சாப்பாடு 14, தேநீர் 2, காபி 3, பால் 3. இது சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு. நாங்கள் வசித்த பகுதி நகரத்திற்கு அப்பால் இருந்ததால் மக்கள் குறைவாகவே தென்படுவர். தட்டி விலாஸ் தான் எங்கள் பகுதியின் பிரதான மையம். உணவகத்திற்கு அனைத்து வித மக்களும் வந்து போவார்கள். நிறைய விசுவாசிகளும் உண்டு, நான் உள்பட. குறிப்பாக பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள். காலை ஏழு மணி முதலே இவர்கள் வர தொடங்கிவிடுவார்கள். சியாமளா அக்காதான் அனைவருக்கும் இலை போடுவாள், பரிமாறுவாள், கணக்கெழுதுவாள். சமைப்பது இரண்டாவது பெண் மற்றும் அம்மா. சியாமளா அக்கா சலிக்காமல் அனைவரிடமும் அன்பாக பேசி, பறவையாக பறந்து வேலை செய்வாள். சட்டை, பாவாடை அணிந்திருப்பாள். எண்ணெய் தடவி வழித்து வாரி பின்னப்பட்ட குறைவான தலைமுடி. எவ்வளவு பேர் வந்தாலும், யார் என்ன வாங்கினார்கள் என சரியாக ஞாபகம் வைத்து கணக்கும் போட்டு கச்சிதமாக வியாபாரம் செய்வாள். அவர்கள் ஏழைகளாக இருந்து, குடும்பத்தின் கூட்டு முயற்சியால் ஓரளவுக்கு முன்னேரி இருந்தார்கள். இரவு நேரங்களில் குடிகாரர்களும் வருவார்கள். சிலர் வாயிலெடுத்தும் பார்த்திருக்கிறேன். முகம் சுழிக்காமல் வேலை செய்வாள் சியாமளா அக்கா.



நானும் என் தங்கையும் அடிக்கடி அங்கு சாப்பிட செல்வோம். இருபது ரூபாயில் இருவரும் வயிறு முட்ட தின்றுவிடுவோம். முதலில் ஆவி பறக்க நான்கு இட்லி வாங்குவேன். தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி, சாம்பார் மற்றும் தக்காளி சட்னி. சியாமளா அக்கா தான் ஊற்றுவார். அதிகமும் ஆகாமல், குறையவும் அல்லாமல் சரியாக அளந்து ஊற்றுவார். அதன் சுவைக்கு ஈடு இணையே கிடையாது. கட கடவென விழுங்கி விடுவேன். எப்படித்தான் செய்வார்களோ. பின்னர் இரண்டு தோசைகள். முறுகலாக நேர்த்தியாக சுடப்படிருக்கும். சொர்க்கத்தை சுவைத்தது போல உணர்வேன். பின்னர் அம்மா, அப்பாவிற்கு பார்சல் கட்டிக்கொண்டு அடுத்தது எப்போ வரலாம் என்று யோசனை செய்து கொண்டே விடை பெறுவோம். பெரும்பாலும் சனிக்கிழமைகளில் மதியம் சாப்பாடு தட்டி விலாஸில் தான். அவர்களின் ரசத்திற்கு ஈடு இணையே கிடையாது. அப்பளம் கூட அமிர்தமாக இருக்கும்.




விடுமுறை நாட்களில், இரவு வேளைகளில் நண்பர்களுடன் தட்டி விலாஸில் ஒரு முறையும், வீட்டில் ஒரு முறையுமாக மாய பஜார் ரங்காராவ் போல வெளுத்து கட்டுவேன். எந்த நல்ல விஷயமும் ஒரு நாள் முடிவுக்கு வரவேண்டும் என்பது இயற்கையின் நியதி போலும். தட்டி விலாஸும் ஒரு நாள் மூடப்பட்டது. சியாமளா அக்கா திருமணம் செய்து கொண்டதாக சிலர் கூறினர். அவர்கள் சொந்த ஊருக்கே சென்று விட்டதாக கேள்விப் பட்டேன். மிகவும் வருந்தினேன். என் வாழ்வில் எதையோ இழந்ததை போல உணர்ந்தேன். அவர்களுக்கு பின்னர் எங்கள் பகுதியில் பல உணவகங்கள் வந்து சென்றன. ஒன்று கூட தட்டி விலாஸ் தந்த உணர்வை, சுவையை தரவில்லை.

காலம் சென்றது. நானும் வேலைக்காக பெங்களூருக்கு குடிபெயர்ந்தேன். இரண்டாவது முறையாக ஒரு கன்னட உணவகத்தில் சாப்பிட்டேன். சாம்பார் இனித்தது, இட்லி கசந்தது. சுத்தமாக பிடிக்கவில்லை. எனக்கு தட்டி விலாஸின் ஞாபகம் மீண்டும் மீண்டும் வந்தது, இன்றும் வருகிறது.

Saturday, June 12, 2010

அறியா(மை)


"என்னடா சோகமா இருக்க?" என்று கேட்டுக் கொண்டே கோல்டு பில்டர் சிகரெட்டை பற்ற வைத்தான் மணி. எட்டாம் வகுப்பிலிருந்தே புகை பிடிக்க அரம்பித்துவிட்டிருந்தான்.

அன்று என் ஆயிரம் ருபாய் விலைமதிப்புள்ள கால்குலேட்டரை தொலைத்திருந்தேன். வீட்டில் சொன்னால் மரண அடி விழும். செய்வதறியாது தவித்துக் கொண்டிருந்தேன்.

"கால்குலேட்டர் காணாம போச்சுடா."

"எப்டிடா தொலைச்ச?"

"பஸ்ல பேக்ல இருந்து எவனோ உருவிட்டான்னு நெனக்கறேன்."

"ஆமா நீ அனிதாவையே பாத்துட்டு இருந்திருப்பே. உன் சட்ட பேன்ட உருவிருந்தா கூட உனக்கு தெரிஞ்சிருக்காது."

"நானே கடுப்புல இருக்கேன். நீ வேற ஏன்டா."

"சரி விடு மச்சி. இதுக்கு போய் கவலை படற. ஈசியா கண்டுபிடிச்சரலாம். தம் வேணுமா?" என்று வழக்கம் போல் கேட்டான் மணி.

"செருப்படி வாங்கி குடுக்காம விட மாட்ட போல. தம் அடிச்சா எங்க வீட்டு நாயே கண்டுபுடிச்சுரும்." என்று நானும் வழக்கம் போல் சிகரெட்டை தவிர்த்தேன்.

"மணி அது எப்டிடா ஈசியா கால்குலேட்டர கண்டுபிடிக்கறது? பேசாம போலீஸ் கம்ப்ளைண்டு குடுத்துரலாமா?"

"இது உனக்கே ஓவரா தெரில?" என்று காரப்பார்வை பார்த்தான் மணி.

"வேற வழி இருக்கா. வீட்ல தெரிஞ்சா கொன்னே போட்ருவாங்க."

"எனக்கு தெரிஞ்ச ஒரு ஆளு மதுக்கரைல இருக்காரு. ஒரு நூறு ரூபா குடுத்தா கல்குலேட்டர் இருக்கற எடத்த புட்டு புட்டு வெச்சுருவார். "

"யாருடா அந்த மகான். ஆமா அது சரி, நான் நூறு ரூபாக்கு எங்க போவேன்?"

"இருக்கவே இருக்கான் நம்ம தரணி. அவன் கிட்ட வாங்கிக்குவோம். அப்பறமா சேத்து வெச்சு குடுத்திரலாம்." என்று மறுக்க முடியாத ஒரு யோசனையை கூறினான் மணி.

"அதுவும் சரி தான். எப்டி அந்த ஆளு கண்டுபிடிச்சு குடுப்பாரு? அவரு பெரிய மாபியாவா?"

"அதெல்லாம் உனக்கு எதுக்கு. இப்போ கிளம்பு. நம்ம மதுக்கரைக்கு போலாம். நீயே நேர்ல பாத்துக்கோ."

ஒரு மணி நேர பிரயாணத்திற்குப் பிறகு மதுக்கரை சென்றடைந்தோம். சிமென்ட் தொழிற்சாலைகள் நிரம்பி வழியும் பகுதி. நகரத்திற்கு அப்பால் இருந்தமையால் அந்த சுற்றுவட்டாரமே வெறுச்சோடி கிடந்தது. தூசு படிந்த காற்று. இதமான வெய்யில். தொய்வில்லாமல் நடக்கலானோம். ஒரு கிலோமீட்டர் நடந்த பின்னர் சில வீடுகள் தென்பட்டன. மணி ஒரு வீட்டை நோக்கி நடந்தான். நான் பின்தொடர்ந்தேன்.

ஒரு எளிமையான வீடு. முட்களால் ஆன வேலி. ஒரு சிறிய நுழைவாயில் வழியாக உள்ளே சென்றோம். வெளிப்புறத்தே பல வகை செடிகள் இருந்தன. திருஷ்டி பூசணிக்காய் மாடி மேல் இருந்து சிரித்தது. முன்கதவின் மேலே ஒரு வாஸ்து இயந்திரம் தொங்கிக்கொண்டிருந்தது. அதை பார்த்ததும் லேசாக பயம் ஒட்டிக்கொண்டது.

"நீ இங்கயே இரு. நான் உள்ள போய் பேசிட்டு வரேன்." என்று தனியே விட்டு விட்டு போனான் மணி.

சிறிது நேரம் கழித்து மணி உள்ளிருந்து அழைத்தான். யார் இந்த ஆள்?. எப்படி என் பொருளை கண்டுபிடிப்பான் என்று வழி நெடுக நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். மணியையும் பல முறை கேட்டு விட்டேன். அவன் பதில் கூற மறுத்து விட்டான்.

உள்ளே சென்றேன். அறைகள் முழுவதுமாய் சாமி படங்கள். ஒரே புகை மூட்டமாய் இருந்தது. ஒரு பாய் விரித்திருந்தது.

"உக்காருங்க. ஐயா இப்போ வந்திருவாரு" என்று ஒரு நடுத்தர வயது ஆசாமி திடிரென்று தோன்றி கூறினான்.

நாங்கள் அமர்ந்தோம். தண்ணீர் குடுத்தான் அந்த ஆசாமி. நடந்த களைப்பில் நிறையாவே குடித்தேன்.
குடித்த பின்பு தான் கவனித்தேன். தண்ணீர் மஞ்சள் நிறத்தில் இருந்தது. லேசாக உப்புக் கரித்தது.

"என்னதுங்க இது?" என்றேன்.

"கோமியம். ஒடம்புக்கு ரொம்ப நல்லது." என்று இளித்தான் அந்த எடுபிடி. எனக்கு குமட்டிக்கொண்டு வந்தது. பாக்கெட்டில் இருந்த இரண்டு தேன் மிட்டாய்களை வாயில் போட்டுக்கொண்டு சமாளித்தேன்.

"இப்போவாவது சொல்லுடா. இந்த ஆளு பெரிய திருடனா? நிறைய கனெக்சன் வெச்சிருக்கானா? அப்டி இருந்தாலும் ஒரு கல்குலேட்டர கண்டுபிடிக்கறது ரொம்ப சிரமம் ஆச்சே?"

"பேசாம இருடா. சாமி வந்துட்டாரு"

"என்னது சாமியா. என்ன சொல்ற. எங்க இருக்காரு?"

"அங்க பாரு வர்றாரு."

தமிழ் சினிமா கதாநாயகி போல புகை சூழ பின் வாசல் வழியாக மூன்றடி உயரத்தில் ஒரு அரைக்கிழவன் வந்தான். அவனை பார்த்ததும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. வாயை பொத்தி சிரமப்பட்டு சிரிப்பை அடைத்தேன்.

"ஏன் சிரிக்கற. அவரு எவளோ பெரிய ஆளு தெரியுமா. உன் கால்குலேட்டர் எங்க இருக்குனு அவரு சொல்லலேன்னா என் பேர மாத்திக்கரேண்டா." என்று மணி என் காதுக்குள் கிசுகிசுத்தான்.

"என்ன தம்பி என்ன பிரச்சன?" என்றார் சாமி.

இம்முறை வாய்விட்டு பலமாக சிரித்தேன். பின்னே பெண் குரலில் பேசினால் யாருக்கு தான் சிரிப்பு வராது. மணி என்னை முறைக்க சிரிப்பை அடக்கிக் கொள்ள முயற்சித்து இரண்டு முறை இடைவெளி விட்டு சிரித்து முடித்தேன். சாமி இதையெல்லாம் பொருட்படுத்தவே இல்லை.

"சாமி இவனோட கால்குலேட்டர காணோம். நீங்க தான் எப்டியாவது கண்டுபிடிச்சுக் குடுக்கணும்."
என்றான் மணி.

"காணிக்கை கொண்டு வந்திருக்கீங்களா?"

ஆம் என்று தலை ஆட்டினோம்.

"இந்த தட்ல போடுங்க." என்றார் சாமி. முழுதாக நூறு ரூபாயை போட்டோம்.

"கால்குலேட்டர் தானே இப்பவே எங்க இருக்குனு பாத்துடலாம்." என்று கூறிக்கொண்டே ஒரு வெற்றிலையை எடுத்தார் சாமி. கூடவே நின்று கொண்டிருந்த எடுபிடி மை டப்பாவை நீட்டினான்.

வெற்றிலையில் மையை தடவி வாயில் ஏதோ முணுமுணுத்தார் சாமி. எனக்கு நூறு ருபாய் அம்பேல் என்று உறுதியாக தெரிந்துவிட்டது.

"சாமி எதாவது தெரியுதுங்களா." என்றான் மணி ஆவலுடன்.

"ஒரு நிமிஷம்." என மீண்டும் முணுமுணுத்தார் சாமி. ஏதோ ஜக்கம்மா மந்திரம் போல கேட்டது.

"இப்போ பொருள் சேலத்துல இருக்கு. சரியா சொல்லனும்னா சேலத்த தாண்டி தர்மபுரி நோக்கி போய்ட்டு இருக்கு."

"என்னடா இந்த ஆளு பஸ் ரூட்டெல்லாம் சொல்றான்." என்றேன்.

"சும்மா இருடா. என்னதான்னு கேப்போமே. சாமி கொஞ்சம் தெளிவா சொல்லுங்க."

"நீங்க தேடற பொருள் தர்மபுரிய நோக்கி போய்ட்டு இருக்கு. திருடன் பஸ்ல போய்ட்டு இருக்கான்னு நெனக்கறேன். இதுக்கு மேல தொறத்தி பிடிக்கறது ரொம்ப கஷ்டம். உள்ளூர்ல இருந்தா சுலபமா மடக்கி புடிச்சிருக்கலாம். உங்க கெட்ட நேரம். கெடைக்கறது ரொம்ப கஷ்டம்." என்று புன்னகையுடன் கூறினார் சாமி.

"இந்த ஆளுக்கு நல்ல நேரம். நல்ல ஆளுகிட்ட கூட்டிட்டு வந்தடா. இத முன்னாடியே சொல்லிருந்தா வந்தே இருக்க மாட்டேன். இப்போ இன்னொரு நூறு ரூபாயும் போச்சு." என்று மணியை திட்டினேன்.

"ஜிபிஎஸ் (GPS) எல்லாம் இந்த ஆளு முன்னாடி ஒண்ணுமே இல்ல. வெத்தலைலையே மேப்பு போடறான். ஏன்டா நீ இவன பத்தி முன்னாடியே சொல்லல? " என்று நான் கடுகடுத்தேன்.

"பரம ரகசியம்னு சாமி சொன்னாரு. மின்னாடியே வெத்தல மேட்டர சொன்னா மந்திரம் பலிக்காதுன்னு போன தடவ வந்த போது சொன்னாரு. " என்றான் மணி.

"அடப்பாவி நீ அடிக்கடி வந்து போற எடமா இது. படிச்சவன் தானடா நீ."
மணி வெட்கித் தலை குனிந்தான்.

"தம்பிங்களா மணி ஆறாகப் போகுது. நான் ஜகன் மோகினி யாகம் செய்யணும். கொஞ்சம் சீக்கரம் எடத்த காலி பண்ணுங்க." என்றான் அந்த பித்தலாட்டக்காரன்
.
சிரித்துக்கொண்டே "ரொம்ப நன்றிங்க. அப்போ நாங்க கிளம்போரங்க." என்று கூறி ஒரு வழியாக இடத்தை காலி செய்தோம்.

மணியை அன்று திட்டியது போல் நான் இது வரை யாரையும் திட்டியது இல்லை. கால்குலேட்டர் தொலைந்ததை வீட்டில் இன்று வரை சொல்லவில்லை. சம்பவம் நடந்து ஒரு வாரம் கழித்து மணி தொலைபேசியில் அழைத்தான்.

"டேய் மச்சான் என் ஆள நாலு நாளா காணோம். வீடு கூட பூட்டிருக்கு. எனக்கு என்ன பண்றதுன்னு தெரில."

"நீ அங்கேயே இரு. நான் உடனே வரேன். மதுக்கரைக்கு போலாம்." என்று நான் கூறியதும் மணி இணைப்பை துண்டித்து விட்டான். உள்ளுக்குள் மிதமாக நகைத்துக்கொண்டேன்.

Sunday, June 06, 2010

பூக்காரப் பாட்டி

எனக்கு நினைவு தெரிந்த காலம் முதல் அந்த மூதாட்டியை அறிவேன். காலை ஏழு மணிக்கெல்லாம் எங்கள் தெருவிற்கு வந்து விடுவாள். ஒவ்வொரு வீடாக பூ வேண்டுமா என்று கேட்பாள். இடுப்பில் மரத்தால் பின்னிய ஒரு கூடை. பக்கத்தில் இருந்து கவனித்தால் அந்த கூடை அவளை பாதி மறைத்திருப்பது தெரியும். உள்ளே அனைத்து வண்ணங்களிலும் பூக்கள் இருக்கும். அரளிப்பூ, துளசி மாலை, மல்லிகை, முல்லை மற்றும் சங்குப்பூ என் பல வகைகள் கூடையில் சங்கமிக்கும். கூடையின் விளிம்பில் கையிற்றால் கட்டிய ஒரு அக்ஸா ப்ளேடு. காலில் செருப்பு கிடையாது. ஒரு வெள்ளை சீலை மட்டும் அணிந்திருப்பாள். வயது அறுபதை கடந்திருக்கும் என்பது என் யூகம்.



என் பாட்டி தினமும் அவளிடம் பூ வாங்கி சாமி படங்களுக்கும், வீட்டின் பிரதான அறையில் தொங்கிக் கொண்டிருக்கும் என் கொள்ளுத் தாத்தாவின் படத்திற்கும் சாத்துவாள். கொள்ளுத் தாத்தா திப்பு சுல்தான் அரண்மனையிலே பணியாற்றியவர் என்று பூ சாத்தும் ஒவ்வொரு முறையும் கூறுவாள் பாட்டி. பூக்காரப் பாட்டிக்கு நாங்கள் எவ்வளவு முழம் பூ வாங்குவோம் என்பது மனப்பாடம். கட கட வென கையில் முழம் போட்டு அக்ஸா ப்ளேடால் படக் என்று வெட்டித் தருவாள். கூட கொஞ்சம் கொசுரும் தருவாள். இந்த கொசுரு தரும் பழக்கம் ஒரு மிகப் பெரிய வியாபார உத்தி. வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் மற்றும் விசுவாசிகளாக மாற்றி விடும். என் பாட்டியும் விதிவிலக்கல்ல. இரண்டு மூதாட்டிகளும் சிறிது நேரம் உரையாடிக் கொள்வார்கள். என்ன தான் பேசுவார்களோ தெரியவில்லை. ஓரிரு சமயம் ஒட்டுக்கேட்டிருக்கிறேன். பூக்காரப் பாட்டி தன் மகனைப் பற்றி எதாவது கூறிக்கொண்டிருப்பாள். என் பாட்டி ஆறுதல் படுத்துவாள்.

ஒரு நாள் சாயங்காலம் காந்திபுரம் லாலா கடைக்கு அம்மாவுடன் சென்றிருந்தேன். ஒரு கிழக் குரல் எங்களை அழைத்தது. பூக்காரப் பாட்டி அங்கே தன் பேத்தியுடன் வியாபாரம் செய்து கொண்டிருந்தாள். அப்பொழுது எனக்கு ஒரு பதினைந்து பதினாறு வயதிருக்கும். அவள் பேத்திக்கும் என் வயது தான் இருக்கும் என்று உருவத்தை பார்த்து எடை போட்டுக் கொண்டேன். பேத்தி காலையில் பள்ளிக்கூடம் போவதாகவும் மாலையில் தனக்கு உதவுவதாகவும் பாட்டி கூறினாள். அவர்கள் மீது ஒரு வித பரிதாபம் ஏற்பட்டது. பிளாட்பாரத்தில் பாட்டியின் அந்த மரக்கூடை இருந்தது. கூடவே அதன் சகோதரிகளைப் போல் வேறு இரண்டு கூடைகள் இருந்தன. பழுப்பு நிறமாக மாறி இருந்த ஒரு வெள்ளைத் துண்டு தான் அவர்கள் இடம். அதன் மீது தான் நாள் முழுக்க அமர்ந்து வியாபாரம். ஈயத்தால் ஆன ஒரு தூக்கு போசி காலியாக கமுத்தி வைக்கப்பட்டிருந்தது. அருகே அழுக்கு படிந்த தண்ணி பாட்டில். பாட்டி காலையில் எங்கள் நகரில் வியாபாரத்தை முடித்து விட்டு காந்திபுரம் வந்து நாள் முழுக்க பிளாட்பாரத்தில் அமர்ந்து பூ விற்பாள் என்று அம்மா சொன்னாள். அவர்கள் லாலா கடையில் இது வரை எதாவது வாங்கியிருப்பார்களா என்றொரு கேள்வி எழுந்தது.



இந்த காட்சி அன்று என்னை பெரிதாக பாதிக்கவில்லை. அன்று நான் வெளி உலகம் அறிந்திருக்கவில்லை. நான் கல்லூரிப் படிப்பு முடித்து வேலைக்கு கோவையை விட்டு செல்லும் வரையிலும் பாட்டி பூ விற்றுக்கொண்டிருந்தாள். கடந்த சில வருடங்களாக விடுமுறைக்கு கோவை வந்த பொழுது பாட்டியை காணக் கிட்டவில்லை. வெளி உலகம் ஓரளவு பரிச்சயமான பிறகு என் மனதில் அந்த மூதாட்டியைப் பற்றி பல எண்ணங்கள் தோன்றுகின்றன. பாட்டிக்கு பூக்கள் எங்கிருந்து கிடைக்கின்றன? அவளது ஒரு நாள் சராசரி வருமானம் எவ்வளவு இருக்கும்? அவள் வீடு குடிசையா அல்லது பிளாட்பாரம் தானா? உடல் கழிவுகளை எவ்வாறு நீக்குவாள்? உழைக்க உடம்பு நெளியாத நான் அந்த மூதாட்டியின் முன் எம்மாத்திரம்? தன் மக்கள், பேத்திகளுக்கு எம்மாதிரியான இடங்களில் திருமணம் செய்து வைப்பாள்? கணவன் (கிழவன்) உயிருடன் தான் இருக்கிறானா? இவ்வளவு சுலபமாக வித விதமாய் எப்படி பூ
கட்டுகிறாள்? நான் பூ கட்ட பல முறை முயன்று தோற்றுப் போயிருக்கிறேன். மின்னல் வேகத்தில் சரியான விகிதத்தில் பூக்கள் பொறுக்கி முடிச்சு போடுவதற்கு பின்னால் எத்தனை நியுரான்களின் பாய்ச்சல். அது ஒரு கலை என்பது என் அபிப்ராயம்.

அந்த மூதாட்டியின் உலகம் தான் எவ்வளவு சுருங்கியது. பிளாட்பாரம், சாலைகள், பூக்கள், நூல், நாளை சூரியன் உதிக்கும் என்கிற ஒரு நம்பிக்கை. மனமென்னும் அட்சயபாத்திரம் அள்ளித் தரும் உற்சாகம் மட்டுமே மூலதனம். சுருக்குப் பையில் சில சில்லறைகள் மற்றும் வெற்றிலை. அவளின் வாழ்கை முறையை நினைத்தால் இன்றும் வியப்புகுள்ளாகிறேன். இயற்கையை அவ்வளவாக தீண்டாத எளிய வாழ்க்கை. உழைத்து நிம்மதியாக உறங்கும் ஜீவன். என்னுள் எழுந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க அந்தக் கிழவி இன்று உயிருடன் இருக்கிறாளா என்று தெரியவில்லை.

எனக்கு மாலை சாத்தும் பழக்கம் கிடையாது. கடவுள் நம்பிக்கை இல்லாதது ஒரு காரணம். ஆனாலும் யாரேனும் பூ விற்றால் ஒரு முழமாவது வாங்கிவிடுவேன். அது நான் அவர்கள் உழைப்புக்கு செலுத்தும் மரியாதை. பாட்டிக்கு செலுத்தும் மரியாதை. பூ கட்டும் கலைக்கு செலுத்தும் மரியாதை.

Friday, May 28, 2010

பயம்


கிரேஹௌண்ட் (Greyhound), வட அமெரிக்காவின் மிகப் பெரிய போக்குவரத்து நிறுவனம். சுமார் 2300 நகரங்களை இணைக்கும் பேருந்து சேவை அளிக்கும் நிறுவனம். அருகில் உள்ள நகரத்துக்கு செல்ல கிரேஹௌண்டை இரண்டு காரணங்களுக்காக தேர்வு செய்தேன். ஒன்று, குறைந்த கட்டணம். இரண்டு, வேறு வழி இல்லை.

பத்து மணிக்கு புறப்படும் பேருந்தை பிடிக்க ஒன்பது மணிக்கெல்லாம் ஆஜர் ஆகும் படி பயணச்சீட்டில் குறிப்பிட்டிருந்தார்கள். நேரத்தை கடை பிடிப்பதில் ஜெர்மானியர்களைப் போல இருக்க வேண்டும் என்று எனக்கு நானே விதித்துக் கொண்ட கட்டளையின் பேரில் எட்டே முக்காலுக்கு ஆஜர் ஆனேன். பயணச்சீட்டை காண்பித்து போர்டிங் பாஸும் வாங்கி ஆகி விட்டது. பேருந்து புறப்பட ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இருக்கிறதே என்று கையில் இருந்த 'Surely you are joking Mr. Feynman' புத்தகத்தை ஐந்தாவது முறையாக படிக்க ஆரம்பித்தேன். இந்தப் புத்தகத்தை முதல் முறை வாசித்த பொழுதே எனது அங்கங்களுக்குள் ஒன்றாகி விட்டிருந்தது. புத்தகங்களை இரவல் குடுக்கும் விஷயத்தில் நான் மகா கஞ்சன். என்னிடம் ஏழைகள் யாரும் இரவல் கேட்பதில்லை. கேட்பவர்கள் அனைவரும் குறைந்தது இருபது ஆயிரம் மாதச் சம்பளம் வாங்கும் கணிப்பொறி கிராக்கிகள் தான்.

சரி விஷயத்திற்கு வருகிறேன். மேற்கூறிய கஞ்சத்தனத்தால் தான் இந்த புத்தகம் ஐந்து ஆண்டுகளாக என்னிடம் இருக்கிறது. படிக்க ஆரம்பித்த பொழுது கவனம் சிதறிக் கொண்டே இருந்தது. காரணம் மக்கள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தார்கள். மக்களில் தொண்ணூறு சதவிகிதம் ஆப்ரிக்க அமெரிக்கர்கள். இனவாதத்தை அடியோடு வெறுப்பவன் நான். ஆயினும் அவர்களை பார்க்க பார்க்க உள்ளே ஒரு வித பயம் மேலும் கீழும் உருண்டது. உயிர் மேல் ஆசை இருந்தால் கருப்பர்கள் என்ன கேட்டாலும் கொடுத்து விடு என்று நண்பர்கள் எச்சரித்தது நினைவுக்கு வந்தது.

எனது பயத்தை நினைத்து வெட்கினேன். ஆனால் அந்த உணர்வை அடக்க முடியவில்லை. கட்டுப்படுத்த முடியாத இனவாத உணர்வு. பயணிகள் அனைவரிடமும் ஒரு ஒற்றுமை இருந்தது. அனைவரும் சாதாரண உடை அணிந்திருந்தார்கள். சிலர் மங்கிய உடை அணிந்திருந்தார்கள். அமெரிக்காவில் சாதரணமாக காணப்படும் ஆடம்பரம் அவர்களிடம் இல்லை. நிறைய பேர் புகைப் பிடித்தனர். ஒருவன் நெருப்பு இருக்கிறதா என்று என்னிடம் கேட்டான். நான் இல்லை என்று தலை ஆட்ட முறைத்துக் கொண்டே விலகிச் சென்றான். அனைவரும் கார் இல்லாத ஏழைகள் என்று ஒரு கோட்பாட்டை உருவாக்கிக் கொண்டேன்.

ஏன் இவர்களில் நிறைய பேர் ஏழையாக இருக்கிறார்கள் என்ற ஒரு கேள்வி எழுந்தது. அவர்கள் வளரும் சூழல் ஒரு மிகப் பெரிய காரணமோ?. சுற்றிலும் படிப்பறிவு இல்லாதவர்கள் இருப்பின் ஒருவன் படிக்க செல்வது முடியாத காரியம். ஏன் நிறைய பேர் திருடுகிறார்கள்?
'A Scanner Darkly' திரைப்படத்தில் வரும் ஒரு வசனம் நினைவிற்கு வந்தது.
'சக்கரை வியாதி உள்ள ஒருவன் இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அவன் உயிர் வாழ இன்சுலின் வாங்கியே ஆக வேண்டும். அவனிடம் காசு இல்லை என்றால் என்ன செய்வான்? அடுத்தவனிடம் இருந்து பிடுங்கியாவது இன்சுலின் வாங்க நினைப்பான்'.

மறுக்கப் பட்டவர்கள் மடிவார்கள் அல்லது உலகத்திடம் இருந்து பிடுங்கிக் கொள்வார்கள். ஆய்த எழுத்து திரைப்படத்தில் இன்பா கூறும் ஒரு வசனம், 'இந்த உலகம் எனக்கு எதுவுமே குடுக்கல. எல்லாமே நானா புடுங்கி எடுத்து கிட்டது தான்.' ஏன் இவர்கள் மறுக்கப் படுகிறார்கள்? இந்த கேள்விக்கு ஓராயிரம் பதில்கள் இருக்கலாம். எனக்கு சரியான காரணம் தெரிய வில்லை.

மணி பத்தாகி விட்டிருந்தது. தோதான இருக்கையாக தேடித் பிடித்து அமர்ந்தேன். புத்தகத்தில் ஆழ்ந்தேன். ஒரு மணி நேரப் பயணத்திற்கு பிறகு பேருந்து ஒரு இடத்தில் நிறுத்தப் பட்டது. அனைவரும் இறங்கிப் போனார்கள் என்னைத் தவிர. என் பையில் மடிக்கணினி மற்றும் உடைகள் வைத்திருந்தேன். அவற்றை விட்டு விட்டு போக மனம் இல்லை. வந்த சிறுநீரை அடக்கிக் கொண்டு புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். இன்னும் இரண்டு மணி நேரப் பயணம் தான். பின் போய்க் கொள்ளலாம் என்கிற ஆறுதல்.

அப்பொழுது ஒருவன் பக்கத்தில் வந்தமர்ந்தான். அவசரமாக ஒருவரை அழைக்க வேண்டும் என்று எனது கைப்பேசியை கேட்டான். வேறு வழி இல்லாமல் எனது கைப்பேசியை கொடுத்தேன். வாங்கியவன் சிக்னல் சரியில்லை என்று கூறி கிழே இறங்கி சென்றுவிட்டான். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இறங்கி அவனை பின் தொடரலாமா? பையில் கணினி வேறு இருக்கிறது. அதையும் எடுத்துச் செல்லலாமா? கைப்பேசி போயே போச்சா? ஐயையோ பேருந்தை இப்பொழுது எடுத்து விடுவானே. ஓட்டுனர் கூட வந்தாயிற்றே. இதயம் பட படக்க செய்வதறியாது முழித்தேன். பேருந்தும் எடுத்தாகிவிட்டது. கிளம்பும் வேளையில் ஆசாமி திரும்பி வந்துவிட்டான். நன்றி கூறி கைப்பேசியை திரும்ப கொடுத்து விட்டான்.

அவனை நம்ப மறுத்ததற்காக மனம் வருந்தினேன். இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு சேருமிடம் வந்தடைந்தேன். மூன்று மணி நேரமாக என் கணினியை வெளியே எடுக்க நினைத்து எடுக்கவே இல்லை. பயந்து பயந்து ஒரு வழியாக வந்தாயிற்று. அழைத்து செல்ல வந்த நண்பன் பயணத்தைப் பற்றி விசாரித்தான். அவனது ஒரு பயம் நிறைந்த கிரேஹௌன்ட் பயணத்தை நினைவு கூர்ந்தான். தனி மரம் அல்ல ஒரு தோப்பே என் உணர்வுகளை பகிர்கிறது போலும். அந்த நிகழ்வுக்கு பிறகு இரண்டு முறை கிரேஹௌண்டில் பயணம் செய்து விட்டேன். ஆயினும் ஆப்ரிக்க அமெரிக்கர்களை கண்டால் ஒரு வித பயம் ஏற்படுவது தொடர்கிறது. அதை உணரும் போதெல்லாம் வெட்கித் தலைகுனிகிறேன். இந்த பயம் கலந்த இனவாத உணர்வை என்னால் வெல்ல முடியாததை நினைத்து வருந்துகிறேன். நிச்சயம் என்னை மாற்றிக்கொள்வேன்.

Sunday, May 23, 2010

இலக்கு ??


சூரியன் உறங்கச் செல்லும் தருவாய். தனியாக அமர்ந்திருந்தான். அமெரிக்காவில் ஒரு சிறிய கிராமத்தில் ஒரு மெக்ஸிக்கன் உணவகம் அளித்த நீடிக்காத நிம்மதி அவனை ஆட்கொண்டிருந்தது. புர்ரிடோ பௌல் (Burrito Bowl), வெறும் சாதத்தில் கூட்டை பிசைந்து உண்ணும் பிரம்மையை அவனுக்கு ஏற்படுத்தியது. சைவம் தான் சாப்பிடுவான். மிருக வதைப்பை விரும்பாதவன்.

மொத்தம் உணவகத்தில் அவனைத் தவிர மூன்று பேர் இருந்தனர். ஒரு காதல் ஜோடி, ஆரத் தழுவிக் கொண்டே உணவருந்திக்கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்த அவன் மனம் ஒரு துணைக்காக சற்று ஏங்கியது. வாழ்க்கையில் துணையுடன் வாழ்வது தனது சுதந்திரத்தை பாதிக்கும் என்று எண்ணி தன்னை சாந்தப்படுத்திக்கொண்டான். ஆனால் நிஜத்தில் தனிமையை வெறுத்தான்.

மனம் எதிர்காலத்தை எண்ணி வருந்தியது. தன்னை அறியாமல் குவளையில் உள்ள பாதி உணவை காலி செய்திருந்தான்.
"அடுத்து என்ன செய்யலாம்."
மெக்டோனல்ட்ஸ் சென்று ஒரு ஷேக் குடிக்கலாம் என்றது அடிமை மனது. மூளையின் ஏதோ ஒரு பகுதி அது கொழுப்பு சத்து நிறைந்தது என்று வலியுறுத்தியது. காதல் ஜோடி இடத்தை காலி பண்ண ஒரு மணி நேரமாவது ஆகும் என்று தேவையில்லாமல் கணித்தது மூளை.

உண்டு முடித்தான். மணி எவ்வளவு என்று தெரியவில்லை. கடிகாரம் அணியும் பழக்கம் இல்லை. பொருள் மீது சிறிதும் ஈடுபாடு கிடையாது. அமெரிக்காவில் அவன் இது வரை ஷாப்பிங் செய்யவில்லை. எதையும் தேவை இருந்தால் ஒழிய வாங்கமாட்டான். அதற்கு சோம்பேறித்தனமும் ஒரு காரணம். கார் இல்லாமல் ஒரு நிமிடம் இருக்க இயலாத இந்தப் பிரதேசத்தில் ஒரு வருடம் கார் இல்லாமல் வாழ்திருந்தான். ஓட்டவும் தெரியாது.

"எவ்வளவு கார்கள். எங்கிருந்து வருகிறது எரிபொருள். இவர்கள் ஒரு தேசமே இவ்வளவு நுகர்ந்தால் மற்றவர்கள் என்ன செய்வது. நமது வருங்கால சந்ததியர் என்ன செய்வார்கள்." இந்தக் கேள்வியை அவன் மனதில் செதுக்கியிருந்தான். காபிடளிசதில் (Capitalism) துளியும் நம்பிக்கை கிடையாது.

இப்பொழுது கோடை விடுமுறை. கல்லூரியில் ஒரு ஈ காக்கா இல்லை.

"கிடார் கிளாஸ் வேறு செல்ல வேண்டும்."
திடீர் என்று ஒரு நாள் கிடார் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவு எடுத்து சேரவும் செய்திருந்தான். ஆனால் மனதளவில் ஈடுபாடு கிடையாது.

கணிப்பொறியியல் மேற்படிப்பு படிக்கிறான். அதிலும் ஈடுபாடு கிடையாது. வாழ்வில் என்ன வேண்டும் என்று தெரியாத பல கோடி பேரில் ஒருவன். வாழ்வின் அர்த்தம் என்ன என்று நிறைய யோசித்து ஒரு தீர்வும் கிடைக்கவில்லை அவனுக்கு. நிறைய தத்துவ மேதைகளின் கருத்துக்களை அரை குறையாக தெரிந்து வைத்திருந்தான். இறுதியில் வாழ்கைக்கு அர்த்தம் என்று ஒன்று கிடையாது என்று முடிவு செய்திருந்தான்.

"வாழ்கையின் அர்த்தமின்மை தான் மனிதனை வாழ்க்கைக்கு அர்த்தம் தேட வைக்கிறது என்று ஒரு அறிஞர் சொன்னார். அது எவ்வளவு உண்மை."

நாத்திகவாதி. விதி என்று எதுவும் கிடையாது. அனைத்து நிகழ்வுகளும் இலக்கில்லாமல் நேருவதாக நம்புபவன்.

"நான் தேரமாட்டேன். எத்தனை தடைகள் என்னிடம். கூச்ச சுபாவம். புத்தியின்மை. சோம்பேறித்தனம். எதையும் ஒழுங்காக செய்வது கிடையாது. நண்பர்கள் கூட்டம் குறைந்து கொண்டே வருகிறது. கூடிப் பழகும் தன்மை சிறிதும் இல்லை. இருந்த நகைச்சுவை உணர்வும் சுவடே இல்லமால் மறைந்து விட்டது. நான் வாழத் தகுதி இல்லாதவனா?. இந்த உலகம் என்னை விழுங்கிவிடுமா? "

"மனிதன் இவ்வளவு தூரம் உலகை கட்டுக்குள் கொண்டு வர அறிவு தான் காரணம். அறிவைக் கொண்டு மனிதன் பல்வேறு கருவிகளை படைக்கிறான். அவற்றை துல்லியமாக உபயோகிக்கவும் செய்கிறான். நான் கருவிகளை உபயோகிப்பதில் முற்றிலும் சோடை போகிறவன். நான் தற்கொலை செய்து கொண்டால் என்ன? இத்தனை மனப் போராட்டங்களும் தேவைதானா? "

"மாட்டேன். மாட்டேன். தற்கொலை மட்டும் செய்து கொள்ளவே மாட்டேன். அடுத்த ஜென்மம் என்று ஒன்று கிடையாது. அதெல்லாம் வெறும் கட்டுக்கதை. இறந்தால் அனைத்தும் மறைந்து விடும். மிஞ்சுவது ஒரு வெற்றிடம். இந்த பூமியில் தோன்றுவது எவ்வளவு ஆச்சர்யமான விபத்து. அதை நானே முடித்துக்கொள்வதா? முடியாது. நான் வாழ்ந்தே தீருவேன்."
எவற்றிலும் ஈடுபாடு இல்லாதவனுக்கு ஒன்று மட்டும் இன்பம் அளித்தது. எழுதுவது அவனுக்குப் பிடித்திருந்தது. ஆனால் எந்த மொழியின் மீதும் ஆளுமை கிடையாது. தெரிந்த வார்த்தைகளை போட்டு கிறுக்குவான். நிறைய எழுதுவான். ஆனால் யாரிடமும் காண்பிக்க மாட்டான். தாழ்வு மனப்பான்மை தான் காரணம். இப்படியும் ஒருவன் உலகில் இருக்க முடியுமா என்று தனக்கு தானே கேள்வி எழுப்பிக் கொள்வான்.

"நான் எழுதப்போகிறேன். அதனால் பயன் கிடைக்குமோ கிடைக்காதோ நான் எழுதுவேன். யாருக்கு பிடிக்கிறதோ இல்லையோ நான் எழுதுவேன். எழுத்தாளராக வரவில்லை என்றாலும் பரவாயில்லை நான் எழுதுவேன்."

மடிக்கணினியில் ஸ்டீவ் மில்லரின் டான்ஸ் டான்ஸ் டான்ஸ் பாட்டு ஒலிக்க இந்தக் கதையை எழுதத் தொடங்கினான்.

Saturday, April 24, 2010

Musings...

wrinkles in your face
are as beautiful as
a withered tree

time tickles
it hurts
no thoughts

hatred is sour
some sour fruits
are good for life

chirping of birds
makes me smile
alarm makes me frown

blind bats gorge
all my guavas
poor squirrels

blushing birds shy away
from the moon
for a snooze

we the rocks
are metamorphosized
by the stream of life

do i write haiku
or is it my brother
am i schizophrenic

the color of knowledge
is white says
the blackboard

his mundane existence
at last something happened
funeral bells

hitch hiked and
made it on time
for my first bike race

~arunbharath

Monday, February 15, 2010

குறிப்பிலா குறிப்புகள்...


சில கற்பனைச் சிதறல்களின் பதிவு... ஹைக்கூ (Haiku) வடிவத்தில் இருக்கும் சில வரிகளின் சாரத்தை வாசகர்களின் கற்பனைக்கே விடுகிறேன்.. என் பார்வையில் அவ்வரிகளின் சிந்தையை அறிய விரும்பினால் தங்களது கேள்விகளை பதிவு செய்யுங்கள்.. உடனடியாக பதில் அளிக்கிறேன்..




வாசலில் கோலம். காகத்தின் இரைச்சல். தெருநாய்வாயில் வறுக்கி.
தேனினும் இனிய அதிகாலை காப்பி. "ஏங்க காப்பி சக்கரை போடமறந்துட்டேன் ."



காகிதம் முழுவதும் விளங்க முடியா கிறுக்கல்கள். நூற்றுக்கு நூறு வழங்கிஆசை முத்தமிட்டேன் என் இரண்டு வயது கண்மணிக்கு!


தினமும் பணப்பை பார்க்கும் மனைவி.. காலணியில் உன் புகைப்படச் சுருள்.. ..


சுனாமி எச்சரிக்கை.. மீனவர்கள் இல்லாக் கடல்.. கடற்க் கரையில் ஒரு ஜோடி..


"ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும்.. மிருக வதைப்பின் உச்சகட்டம்.."
"அம்மா ஒரு டம்ளர் பால்.. பசிக்குது.."


அப்பா: "டேய் ஒரு கிளாஸ் டீ கொண்டு வா.."
பிள்ளை: "சரி பா.."
"இந்தாங்க சார் டீ.."
எவனோ: "டீ எவளோங்க??"
இடம்: ஏதோ ஒரு கடை..

Tuesday, January 19, 2010

வசந்த காலங்கள்

வேலை வெட்டி இல்லாமல் இருந்த பொழுது எழும்பிய நினைவுகள் தாம் இவை . எனது சிறிய வயது அனுபவங்களின் தொகுப்பு. வாசகர்களை சந்தேகப்பட வைக்கும் சில பல வரிகள் யாவும் கற்பனையே :). 'ஆட்டோகிராஃப்' நினைவுக்கு வருகிறது என்று தாங்கள் கூறுவது எனக்கு கேட்கிறது. எனக்கு நேர்ந்ததும் சராசரி இந்திய சிறுவனின் அனுபவங்கள் தான்.


இன்பம் துன்பம் மற்றும் பல...

  • ஐந்தாம் வகுப்பில் அடைக்காமல் விட்ட 2 ரூ 50 பைசா தாத்தா பெட்டிக் கடை பாக்கி.
  • முதலும் கடைசியுமாய் அறியாமல் குடித்த கோழி ஸூப்.
  • நண்பனிடம் கேட்டு நிரப்பிய கோடிட்ட இடங்கள்.
  • ஸ்கோர் ஏற்றி வெற்றி பெற்ற கிரிக்கெட் போட்டிகள்.
  • இரவல் வாங்கி உடைத்த நண்பனின் கிரிக்கெட் மட்டை.
  • திருடித் தின்ற தாத்தா கடை தேன் மிட்டாய்கள்.
  • முதல் பேருந்துப் பயணம், பயனச்சீட்டின்றி!.
  • இந்தி வகுப்பு முன் வரும் வலிக்காத தலை வலிகள்.
  • தாளம் போட்டு உடைத்த வகுப்பறை பெஞ்சு.
  • சலூன் கடைத் தூக்கம்.
  • அடுத்த தெரு அனிதாவின் கடைக்கண் பார்வை.
  • 'கெடலை பெறி' அண்ணனின் 'கடலை பொறி'
  • பல்லில்லாமல் பக்கோடா கடிக்கும் தாத்தா.
  • பாட்டி வெடிக்கும் கொள்ளுப் பட்டாசு.
  • கழுகுகளிடம் இருந்து காப்பாற்றிய பூனைக் குட்டிகள்..
  • மாறி மாறி வாங்கிய ஐந்து நாய்க் கடிகள்..

    மேலே கூறியவை நூற்றில் ஒரு பங்கு தான்.. மற்ற அனுபவங்களை தொடர்ந்து எழுதுகிறேன்..

Friday, January 08, 2010

நட்பு

சிங்கபுரி இளவரசன் கோமகனும் புலியூர் இளவரசன் வாமனனும் நீண்ட வாள் பயிற்சிக்குப் பிறகு களைப்பாரிக்கொண்டிருந்தார்கள். இருவரும் பால்ய சிநேகிதர்கள். அத்தருணம் அங்கு சேவகன் செந்தாமரை ஒரு செய்தியுடன் வந்தான்.

"சிங்கபுரி இளவரசர் கோமகனுக்கும், புலியூர் இளவரசர் வாமனனுக்கும் இந்த சிறியவனின் தாழ்மையான வணக்கங்கள்."

"வந்த காரணத்தை கூறும் செந்தாமரையாரே!" என்றான் கோமகன்.

"இளவரசே! தாங்கள் இருவரும் பதினைந்து வயதை இந்த வருடம் கடந்தமையால் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் முதலைக்குளம் சடங்கில் கலந்து கொள்ளுமாறு கட்டளை பிறப்பித்திருக்கிறார்கள் தங்கள் தந்தையார்கள்."

வாசகர்களுக்காக முதலைக்குளம் சடங்கு பற்றிய ஒரு சிறு குறிப்பு. வருடா வருடம் நடைபெறும் இந்த சடங்கில் நூற்றுக்கணக்கான இளவரசர்கள் கலந்து கொள்வார்கள். பெயருக்கு ஏற்ப முதலைக்குளம் முழுவதும் முதலைகள் நிரம்பி வழியும். இளவரசர்கள் அனைவரும் குளத்தின் ஒரு கரையில் ஒன்று கூடுவர். விதிப்படி அனைவரும் குளத்தை நீந்திக் கடக்க வேண்டும். பிழைப்பவர்கள் வருங்கால அரசனாக தகுதி பெறுவார்கள்.

ஒரு மாதத்திற்குப் பிறகு:

சங்கு முழங்க சடங்கு ஆரவாரத்துடன் தொடங்கியது. சரியாக இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு போட்டி நிறைவு பெற்றது. சுமார் அறுபது சொச்சம் இளவரசர்கள் குளத்தை கடந்து வந்திருந்தனர். போட்டியாளர்கள் பட்டியல் (Participants' list) படிக்கப்பட்டது (Roll Call). தங்கள் பெயர் வந்தால் இளவரசர்கள் "உள்ளேன் ஐயா." என்று கூறியபடி களைப்பாரிக்கொண்டிருந்தார்கள். இல்லாதவர்கள் மாண்டவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டார்கள்.

"வாமனன்".
"உள்ளேன் ஐயா." என்றான் வாமனன்.

"கோமகன்".
"உள்ளேன் ஐயா." என்று ப்ராக்ஸீ(Proxy) கொடுத்தான் வாமனன்.

பின் குறிப்பு: கோமகன் அந்தப்புர தோழிகளுடன் நீந்திக் கொண்டிருந்தான். சடங்கு தொடங்கும் முன்பும் ப்ராக்ஸீ(Proxy) விழுந்தந்தை வாசகர்கள் யூகித்திருப்பீர்கள்.