நான் எடுத்துக்கொள்கிறேன் என்று தைரியமாக என் வீட்டிற்க்கு அவனை எடுத்து வந்து விட்டேன். என் அப்பாவிற்கு மிருகங்களை அவ்வளவாக பிடிக்காது. அம்மாவிற்கு மிருங்கங்களின் மீது கொள்ளை பிரியம். அதுவும் பூனை என்றால் சொல்லவே வேண்டாம்.. நாள் முழுக்க அதனுடனே இருப்பார்கள். அப்பொழுது நான், அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா என்று கூட்டுக் குடும்பமாக இருந்தோம். பாட்டியுடன் தான் அதிக நேரம் செலவளித்தேன். பாட்டி என்றுமே என்னை திட்டியது இல்லை. அவர்களிடம் தான் முதலில் பூனையை காட்டினேன்.. பால் வைத்தார்கள்.. அவனுடன் கயிரை வைத்து விளையாடினார்கள்.. அவனுக்கு ஏனோ நாங்கள் பெயர் வைக்கவே இல்லை. அவன் வந்த பிறகு எனது மற்ற வேலைகள் அனைத்தையும் பின்னுக்கு தள்ளி விட்டேன். வீட்டுப் பாடங்களை கட கடவென எழுதி விட்டு அவனுடன் விளையாடிக் கொண்டே இருந்தேன். உறங்கும் பொழுதும் என்னுடன் படுக்க வைத்துக் கொள்வேன். எனக்கு அருகில் அவனை படுக்க வைப்பேன். காலையில் பார்த்தல் என் கால்களுக்கு இடையில் போர்வை மேலே சொகுசாக படுத்துக்கொண்டிருப்பான். கொஞ்சம் புரண்டாலும் செல்லமாக கடிப்பான். அவன் தாய் இல்லாமல் வளர்ந்ததால் அவன் கற்றுக்கொண்டது அனைத்துமே எங்களை பார்த்துத் தான். கழிவறையில் தான் கடன் கழிப்பான். தலையணையில் தலையை மட்டும் வைத்து மனிதர்களைப் போலவே உறங்குவான். என் கால்களை உரசிக்கொண்டே கவனம் கேட்பான். ஒரு நாளும் பால் திருட மாட்டான். அதற்கு அவசியமும் ஏற்படவில்லை.
சில சமையங்களில் மரம் ஏறி கீழே இறங்க முடியாமல் தவிப்பான். நானும் தங்கையும் சில குரங்கு வேலைகள் செய்து அவனை இறக்கி விடுவோம். எந்த நேரமும் அவனை நாங்கள் யாரவது ஒருவர் கண்காணித்துக் கொண்டே இருப்போம். தெருவில் நாய்கள் நடமாட்டமும் அதிகம் இருந்ததால் வீட்டின் கேட்டிற்கு நானும் அம்மாவும் கம்பி கட்டி தடுப்பு அமைத்தோம்.
அதுவும் என் எதிர் வீட்டில் நாய்கள் வளர்த்தி, பயிற்சி அளித்து விற்பனை செய்து வந்தார்கள் இரண்டு சகோதரர்கள். அவர்கள் வீட்டிலும் நிறைய நேரம் நாய்களுடன் விளையாடிக் கொண்டிருப்பேன். அவர்கள் மூலம் தான் நாய்களின் பல ஜாதிகளை அறிந்து கொண்டேன். ஸ்டெபி என்று ஒரு லப்ரடோர் ரெட்ரீவர் (Labrador Retriever) இருந்தாள். சகோதரர்கள் இருவருக்கும் ஸ்டெபி க்ராப்ப் மீது கொள்ளை பிரியம். அது தான் பெயர் காரணம். அவளுடன் ஆவலுடன் நாங்கள் அனைவரும் விளையாடுவோம். இப்பொழுதெல்லாம் பூனை மீது தான் கவனம். ஸ்டெபியை மறந்தே விட்டேன்.
அன்றும் வழக்கம் போல் பள்ளி முடிந்து மாலை பூனையுடன் விளையாட ஆவலாய் ஓடி வந்தேன். வந்ததும் பாட்டி தேநீர் மற்றும் மேரீ பிஸ்கட்டுடன் காத்திருந்தார்கள். பூனை எங்கே என்று கேட்டேன். அது இங்கு தான் சுற்றிக் கொண்டிருக்கும் என்றும், முதலில் சாப்பிடுமாறும் கூறினார்கள். மாலை சிற்றுண்டியை சுவைத்து விட்டு பூனையை தேடி புஸி புஸி என்று வீடு முழுக்க கூவிக்கொண்டே ஓடினேன். அவனை காணவில்லை. ஒவ்வொரு அறையையும் அலசி ஆராய்ந்தும் அவன் கிடைக்கவில்லை. ஒரு வேளை மரத்தின் மேல் ஏறி இறங்க முடியாமல் தவித்துக் கொண்டிருப்பானோ என்று எண்ணி மரங்களின் மீது ஏறித் தேடினேன். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. எனக்கு ஒரே அழுகையாய் வந்தது. சிறிது நேரம் கழித்து தான் பாட்டி விஷயத்தை உடைத்தார்கள். நான் பள்ளிக்கு சென்றதும் அப்பா பூனையை ஒரு பையில் போட்டுக்கொண்டு போய் பத்து கிலோமிட்டர்களுக்கு அப்பால் விட்டு விட்டு வந்துவிட்டார் என்று கூறினார்கள். நான் செய்வது அறியாது தவித்தேன். அப்பா என்றால் எனக்கு பயம். அப்பாவிடம் ஏன் என்று கேட்க துணிவு இல்லை. வயிற்றில் ஒரு முடிச்சு விழுந்தது போன்ற உணர்வு. என் பிரியமான ஜியோமெட்ரி பாக்ஸை ஒரு முறை தொலைத்த பொழுது ஏற்பட்ட அதே முடிச்சு. அவன் என் முதல் வளர்ப்பு. மனது பாரமாக இருந்தது.
இரண்டு நாட்கள் மிகவும் துயரத்தில் இருந்தேன். பின்பு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். மூன்றாவது நாள் காலை எழுந்து பால் வாங்க வெளியே சென்றேன். அப்பொழுது தான் எதிர் வீட்டுச் சகோதர்களின் அம்மா என்னை கூப்பிட்டார்கள். நான் அவர்கள் வீட்டிற்குள்ளே நுழைந்து கண்ட காட்சியை இன்றும் மறக்க முடியாது. என் அருமை பூனை அங்கு எனக்காக காத்திருந்தான். "காலைல ஸ்டெபி ரொம்ப குரைச்சா. போய் பாத்த இது செவுத்து மேல உக்காந்திருக்கு. அப்பறம் தான் உன் பூனை மாதிரி இருக்கேன்னு இங்க புடிச்சு வெச்சிருந்தேன்." என்றார்கள். நான் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. ஸ்டெபி மீண்டும் குரைத்தாள். அவனை தூக்கிக் கொண்டு வீட்டை நோக்கி ஓடினேன்.
பாட்டியிடம் எடுத்துச் சென்றேன். "டேய் இவன் கில்லாடி பூனை டா. மரம் ஏற தெரியலனாலும், எவளோ நாய்கள் கிட்ட இருந்து தப்பிச்சு, நாய் விக்கறவங்க வீட்டுக்கே வந்திருக்கான் பாரு." என்று துணியால் அவனை துடைத்து விட்டுப் பால் வைத்தார்கள். அப்பா என்ன சொல்வாரோ என்ற பயம் இருந்து கொண்டே இருந்தது. காலை நடைப்பயிற்சி முடித்துக் கொண்டு வீடு திரும்பிய அப்பாவிற்கு நான் பூனையுடன் விளையாடிக் கொண்டிருந்ததை கண்டதும் அதிர்ச்சி. "என்னடா ஸ்கூலுக்கு கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்க. போய் தயார் ஆகு" என்றார். நான் ஏக்கத்துடன் பூனையை பார்த்தேன். அவனும் முழித்துக் கொண்டிருந்தான். வெளியே வந்த அம்மாவிடம், "இனிமேல கூடுதலா கால் லிட்டர் பால் வாங்கிக்கலாம்." என்று புன்னகைத்தார் அப்பா.
10 comments:
நன்றி ஐயா!
திக் திக் மனத்தோடு வாசித்தேன். ஹேப்பி எண்டிங். மகிழ்ச்சி தந்தது.
'அவனுக்கு' பெயர் வச்சாச்சா?
நம்ம வீட்டுலே ஏகப்பட்டபேர் இருந்து போயிருக்காங்க. கடைசி மக்கள். கப்பு என்ற கற்பகம், கோபால்கிருஷ்ணன் என்ற கோகி.
இந்த வேர்டு வெரிஃபிகேஷனைத் தூக்கிட்டீங்கன்னா பின்னூட்ஸ் போடும் மக்களுக்கு வசதி.
அருமையான பதிவு
சொல்லிச் செல்லும் விதம் மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்
@துளசி: அவனுக்கு கடைசி வரை பெயர் வைக்கவே இல்லை. அவனுக்கு பிறகு நிறைய பூனைகளை பெயரிட்டு வளர்த்தோம். அவை எல்லாம் மறந்து போய் விட்டது. ஏனோ இவன் மட்டும் மனதை விட்டு நீங்க மறுக்கிறான்! வேர்ட் வேரிபிகசனை நீக்கி விட்டேன். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
@Ramani: நன்றி சார். தொடர்ந்து எழுதுகிறேன் :)
This is our Gopalakirishnan
http://thulasidhalam.blogspot.com/2010/01/blog-post_23.html
அழகான எழுத்து
நல்ல முயற்சி அருண். உணர்வுகளை எழுத்தில் கொண்டுவருவது பெரிய சவால். 'பூக்காரப் பாட்டி', 'என் முதல் வளர்ப்பு' இரண்டிலும் அந்தச் சவாலை நன்றாக எதிர்கொண்டிருக்கிறாய்.
புத்தாண்டில் உன் எழுத்தூக்கமும், படைப்பூக்கமும் பல்கிப் பெருகி மேலும் பல கட்டுரைகள், கதைகள், கவிதைகள் எழுத என் வாழ்த்துக்கள்.
நல்ல முயற்சி அருண். உணர்வுகளை எழுத்தில் கொண்டுவருவது பெரிய சவால். 'பூக்காரப் பாட்டி', 'என் முதல் வளர்ப்பு' இரண்டிலும் அந்தச் சவாலை நன்றாக எதிர்கொண்டிருக்கிறாய்.
புத்தாண்டில் உன் எழுத்தூக்கமும், படைப்பூக்கமும் பல்கிப் பெருகி மேலும் பல கட்டுரைகள், கதைகள், கவிதைகள் எழுத என் வாழ்த்துக்கள்.
@mayileri ரொம்ப நன்றி தல.. உன் படைப்புகளையும் படிக்க மிக்க ஆவலை இருக்கிறேன்.. இந்த ஆண்டு உன் கனவுகள் நிறைவேற வாழ்த்துக்கள் டா :)..
ரொம்ப அழகு. வாழ்த்துக்கள்.
Post a Comment