Sunday, June 06, 2010

பூக்காரப் பாட்டி

எனக்கு நினைவு தெரிந்த காலம் முதல் அந்த மூதாட்டியை அறிவேன். காலை ஏழு மணிக்கெல்லாம் எங்கள் தெருவிற்கு வந்து விடுவாள். ஒவ்வொரு வீடாக பூ வேண்டுமா என்று கேட்பாள். இடுப்பில் மரத்தால் பின்னிய ஒரு கூடை. பக்கத்தில் இருந்து கவனித்தால் அந்த கூடை அவளை பாதி மறைத்திருப்பது தெரியும். உள்ளே அனைத்து வண்ணங்களிலும் பூக்கள் இருக்கும். அரளிப்பூ, துளசி மாலை, மல்லிகை, முல்லை மற்றும் சங்குப்பூ என் பல வகைகள் கூடையில் சங்கமிக்கும். கூடையின் விளிம்பில் கையிற்றால் கட்டிய ஒரு அக்ஸா ப்ளேடு. காலில் செருப்பு கிடையாது. ஒரு வெள்ளை சீலை மட்டும் அணிந்திருப்பாள். வயது அறுபதை கடந்திருக்கும் என்பது என் யூகம்.



என் பாட்டி தினமும் அவளிடம் பூ வாங்கி சாமி படங்களுக்கும், வீட்டின் பிரதான அறையில் தொங்கிக் கொண்டிருக்கும் என் கொள்ளுத் தாத்தாவின் படத்திற்கும் சாத்துவாள். கொள்ளுத் தாத்தா திப்பு சுல்தான் அரண்மனையிலே பணியாற்றியவர் என்று பூ சாத்தும் ஒவ்வொரு முறையும் கூறுவாள் பாட்டி. பூக்காரப் பாட்டிக்கு நாங்கள் எவ்வளவு முழம் பூ வாங்குவோம் என்பது மனப்பாடம். கட கட வென கையில் முழம் போட்டு அக்ஸா ப்ளேடால் படக் என்று வெட்டித் தருவாள். கூட கொஞ்சம் கொசுரும் தருவாள். இந்த கொசுரு தரும் பழக்கம் ஒரு மிகப் பெரிய வியாபார உத்தி. வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் மற்றும் விசுவாசிகளாக மாற்றி விடும். என் பாட்டியும் விதிவிலக்கல்ல. இரண்டு மூதாட்டிகளும் சிறிது நேரம் உரையாடிக் கொள்வார்கள். என்ன தான் பேசுவார்களோ தெரியவில்லை. ஓரிரு சமயம் ஒட்டுக்கேட்டிருக்கிறேன். பூக்காரப் பாட்டி தன் மகனைப் பற்றி எதாவது கூறிக்கொண்டிருப்பாள். என் பாட்டி ஆறுதல் படுத்துவாள்.

ஒரு நாள் சாயங்காலம் காந்திபுரம் லாலா கடைக்கு அம்மாவுடன் சென்றிருந்தேன். ஒரு கிழக் குரல் எங்களை அழைத்தது. பூக்காரப் பாட்டி அங்கே தன் பேத்தியுடன் வியாபாரம் செய்து கொண்டிருந்தாள். அப்பொழுது எனக்கு ஒரு பதினைந்து பதினாறு வயதிருக்கும். அவள் பேத்திக்கும் என் வயது தான் இருக்கும் என்று உருவத்தை பார்த்து எடை போட்டுக் கொண்டேன். பேத்தி காலையில் பள்ளிக்கூடம் போவதாகவும் மாலையில் தனக்கு உதவுவதாகவும் பாட்டி கூறினாள். அவர்கள் மீது ஒரு வித பரிதாபம் ஏற்பட்டது. பிளாட்பாரத்தில் பாட்டியின் அந்த மரக்கூடை இருந்தது. கூடவே அதன் சகோதரிகளைப் போல் வேறு இரண்டு கூடைகள் இருந்தன. பழுப்பு நிறமாக மாறி இருந்த ஒரு வெள்ளைத் துண்டு தான் அவர்கள் இடம். அதன் மீது தான் நாள் முழுக்க அமர்ந்து வியாபாரம். ஈயத்தால் ஆன ஒரு தூக்கு போசி காலியாக கமுத்தி வைக்கப்பட்டிருந்தது. அருகே அழுக்கு படிந்த தண்ணி பாட்டில். பாட்டி காலையில் எங்கள் நகரில் வியாபாரத்தை முடித்து விட்டு காந்திபுரம் வந்து நாள் முழுக்க பிளாட்பாரத்தில் அமர்ந்து பூ விற்பாள் என்று அம்மா சொன்னாள். அவர்கள் லாலா கடையில் இது வரை எதாவது வாங்கியிருப்பார்களா என்றொரு கேள்வி எழுந்தது.



இந்த காட்சி அன்று என்னை பெரிதாக பாதிக்கவில்லை. அன்று நான் வெளி உலகம் அறிந்திருக்கவில்லை. நான் கல்லூரிப் படிப்பு முடித்து வேலைக்கு கோவையை விட்டு செல்லும் வரையிலும் பாட்டி பூ விற்றுக்கொண்டிருந்தாள். கடந்த சில வருடங்களாக விடுமுறைக்கு கோவை வந்த பொழுது பாட்டியை காணக் கிட்டவில்லை. வெளி உலகம் ஓரளவு பரிச்சயமான பிறகு என் மனதில் அந்த மூதாட்டியைப் பற்றி பல எண்ணங்கள் தோன்றுகின்றன. பாட்டிக்கு பூக்கள் எங்கிருந்து கிடைக்கின்றன? அவளது ஒரு நாள் சராசரி வருமானம் எவ்வளவு இருக்கும்? அவள் வீடு குடிசையா அல்லது பிளாட்பாரம் தானா? உடல் கழிவுகளை எவ்வாறு நீக்குவாள்? உழைக்க உடம்பு நெளியாத நான் அந்த மூதாட்டியின் முன் எம்மாத்திரம்? தன் மக்கள், பேத்திகளுக்கு எம்மாதிரியான இடங்களில் திருமணம் செய்து வைப்பாள்? கணவன் (கிழவன்) உயிருடன் தான் இருக்கிறானா? இவ்வளவு சுலபமாக வித விதமாய் எப்படி பூ
கட்டுகிறாள்? நான் பூ கட்ட பல முறை முயன்று தோற்றுப் போயிருக்கிறேன். மின்னல் வேகத்தில் சரியான விகிதத்தில் பூக்கள் பொறுக்கி முடிச்சு போடுவதற்கு பின்னால் எத்தனை நியுரான்களின் பாய்ச்சல். அது ஒரு கலை என்பது என் அபிப்ராயம்.

அந்த மூதாட்டியின் உலகம் தான் எவ்வளவு சுருங்கியது. பிளாட்பாரம், சாலைகள், பூக்கள், நூல், நாளை சூரியன் உதிக்கும் என்கிற ஒரு நம்பிக்கை. மனமென்னும் அட்சயபாத்திரம் அள்ளித் தரும் உற்சாகம் மட்டுமே மூலதனம். சுருக்குப் பையில் சில சில்லறைகள் மற்றும் வெற்றிலை. அவளின் வாழ்கை முறையை நினைத்தால் இன்றும் வியப்புகுள்ளாகிறேன். இயற்கையை அவ்வளவாக தீண்டாத எளிய வாழ்க்கை. உழைத்து நிம்மதியாக உறங்கும் ஜீவன். என்னுள் எழுந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க அந்தக் கிழவி இன்று உயிருடன் இருக்கிறாளா என்று தெரியவில்லை.

எனக்கு மாலை சாத்தும் பழக்கம் கிடையாது. கடவுள் நம்பிக்கை இல்லாதது ஒரு காரணம். ஆனாலும் யாரேனும் பூ விற்றால் ஒரு முழமாவது வாங்கிவிடுவேன். அது நான் அவர்கள் உழைப்புக்கு செலுத்தும் மரியாதை. பாட்டிக்கு செலுத்தும் மரியாதை. பூ கட்டும் கலைக்கு செலுத்தும் மரியாதை.

14 comments:

Unknown said...

என்ன ஒரு நுணுக்கம்! ரூம் போட்டு யோசிச்சாலும் இவளோ விஷயங்கள் தோணாது எனக்கு, அதுவும் ஒரு பூ விக்கற பாட்டிய பாத்து. super!

ப.கந்தசாமி said...

நல்லா இருக்குங்க.

Vish said...

well written da

Senthil said...

மச்சான் பின்னிட்ட

Sowmya S said...

Good one! Is 'Uththi' yukthis's tamil form?

Unknown said...

பின்னூட்டங்களை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி நண்பர்களே :). ஆம் உத்தி, யுக்தி இரண்டுமே 'Strategy' யை குறிக்கும்.

சதுக்க பூதம். (Downtown Demigod) said...

very nice arun. keep going machi..

Arthi said...

good one arun..i totally forgot about her. You made me recollect all the details..u r amazing in personifying things nowadays.

Storm Searcher said...

written in a simple way yet touched me deeply.. -Pravin

Anonymous said...

பிறருடைய வாழ்க்கையை உற்றுக்கவனித்தாலே போதும், கல்வி கர்றுத்தரமுடியாதா உலக அறிவை பெறலாம். நல்ல பதிவு.

Anonymous said...

உங்கள் பதிவு சிறந்த பதிவாக www.sinhacity.com இல் இடம் பெற்றுள்ளது

அன்புடன் நான் said...

உங்க பதிவு மிக நெகிழ்வா இருக்குங்க.

அந்த பாட்டி எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பில்கேட்சை விட நிம்மதியா இருந்திருப்பார் இது உறுதி.

கீழே இருக்கிற சொல் சரிபார்ப்பை எடுத்து விடுங்கோ.... கருத்துரை அனுப்ப இடைஞ்சலா இருக்கு.

பாராட்டுக்கள்.

Unknown said...

Pravin, Vichu thanks guys!

//பிறருடைய வாழ்க்கையை
உற்றுக்கவனித்தாலே போதும், கல்வி கர்றுத்தரமுடியாதா உலக அறிவை
//பெறலாம்.

ரொம்ப சரியா சொன்னிங்க சார்.

//கீழே இருக்கிற சொல் சரிபார்ப்பை எடுத்து விடுங்கோ.... கருத்துரை
//அனுப்ப இடைஞ்சலா இருக்கு.

சரி பார்ப்பை எடுத்து விட்டுடேங்க. உங்க கருத்துக்கு ரொம்ப நன்றிங்க சார்.

Unknown said...

Simply super.very nice .Ezliya nadai .Manthil pathinthu vittal pookara patti.unathu ninaivu ottakangalai paditha binbu nanum pattiai thadukiran.thodaravum unathu ezluth paniyai.vallthukkal.